பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

27


கொள்ளுதல் வேண்டும். ஏதோ தேர்ந்தோம், ஈடுபட்டோம் என்று ஏனோ தானோ போக்காக ஒரு வினையை நாம் மேற்கொள்ளக் கூடாது. நமக்குள்ள ஆர்வம், தகுதி, காலநிலை, இடம் இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே நாம் ஒரு வினையைத் தேர்வு செய்வதோ, ஈடுபாடு கொள்வதோ வேண்டும். இவ்வாறு ஒருவகையாக, ஒரு வினையை நாம் தேர்ந்துகொண்ட பின், நாம் செய்ய வேண்டிய அடுத்த படிநிலை என்ன என்பது பற்றி இனி எண்ணிப் பார்ப்போம்.

வினை விழைவு

1. வினையை விரும்புதல் வேண்டும்

நாம் செய்ய வேண்டிய வினை இதுதான். இதுதான் நமக்குப் பொருத்தமுடையது என்று தெளிவாக நாம் தேர்ந்து கொண்டபின், அந்த வினையை நாம் முழுவதுமாக விரும்புதல் வேண்டும். வினையை முழுவதுமாக விரும்புதல் என்பது, நம் சிந்தனையையும்.ஆர்வத்தையும் அறிவையும் அதிலேயே ஈடுபடுத்துதல். அதைச் செய்கின்ற பொழுதும், செய்யாத பொழுதும் அது பற்றியே எண்ணிக் கொண்டிருத்தல், அதைப் பற்றிய எண்ணுதல் என்பது, அதன் பயன் பற்றியோ, விளைவு பற்றியோ, ஊதியம், அதால் கிடைக்கும் இன்பம் என்பன பற்றியோ எண்ணிக் கொண்டு இருப்பது அன்று. முற்றிலும் அதன் பயனைப்பற்றி எண்ணாமல், அதை எப்படிச் செய்வது, இன்னும் எவ்வெவ் வழி முறைகளைக் கடைப்பிடித்தால் இன்னும் அதனைச் சிறப்பாகச் செய்ய முடியும். அதனைத் திருத்தமுற எப்படிச் செய்வது, அழகுற எப்படிச் செய்வது, செப்பமாகவும், நுட்பமாகவும், ஒட்பமாகவும் எப்படிச் செய்வது என்பது பற்றி யெல்லாம் எண்ணுதல்.

2. செப்பம், நுட்பம், ஒட்பம்

செப்பம் என்பது செவ்வையாக திருத்தமாக, அழகாக, தவறில்லாதபடி என்க. நுட்பம் என்பது மிகவும் பொருத்தமாக, கூர்மையாக, ஆழமாகக் கவனித்து என்க. ஒட்பம் என்பது தெளிவாக, விளக்கமாக, அறிவுணர்வு புலப்படும்படி என்க.

ஒரு சிலையைச் செதுக்குவதாக வைத்துக் கொள்வோம். அதன் உருவம் சரியாக அமையும்படி, தலைக்குத் தக்கபடி உடல், உடலுக்குத் தக்கபடி கை, கால்கள், அவற்றிற்குத் தக்கபடி உயரம், இப்படி அளவுகள் பொருத்தமாய், நாம் அதற்கெனத் தேர்ந்த வடிவப் பொருத்தமாய் அதைச் செய்வதற்கென்று தேர்ந்தெடுத்த கல்லோ, மரமோ, பொருத்தமாய் அமைவது என்பது செப்பம் என்பதற்குள் அடங்கும்.

அச்சிலையினது கண், இமை, காது, மூக்கு வாய், உதடுகள், தாடை, தோள், கை, விரல்கள் முதலியன எல்லாம் இயற்கையாகவும் தவறின்றியும் செதுக்கப்பட வேண்டுமென்பது நுட்பம் ஆகும். இனி,