பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. வினையால் வரும் பயன் தேர்தல்

1. செயல் நமக்கும் பிறர்க்கும்

அடுத்து நாம் ஒரு வினையை மேற்கொள்ளத் தொடங்குமுன், 'நாம் அவ்வினையை ஏன் செய்தல் வேண்டும். அதனால் நமக்கோ, பிறர்க்கோ வரும் பயன் யாது' என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும் (பிறர்க்கு என்றால் நம்மை யொட்டியவர்க்கும், ஒட்டாத பொதுமக்கள் பிறர்க்கும்) நாடு, மொழி, இனம், அறிவியல், இலக்கியம் முதலிய கூறுகளெல்லாம் பிறர் நலம் நாடும் தன்மைகளாம். நமக்கென்பது, நம் வாழ்க்கை நலன்களுக்கும், நம்மைச் சேர்ந்த குடும்பம், சுற்றம், உற்றம் ஆகியவர்களுக்காகவும் என்று பொருள்படும். நமக்கு என்பது தன்னல அடிப்படையில் எழும் உணர்வாகும். இவ்வுணர்வு தவறாகாது, என்றாலும் இவ்வுணர்வு ஒன்றின் காரணமாகவே நாம் ஒரு வினையைத் தொடங்குதலும் செய்தலும் அவ்வளவு பாராட்டக்கூடிய செயலாக ஆகிவிடாது. நம் மக்கள் தன்மைக்கும் அது பொருந்தாது. நாம் செய்யும் ஒவ்வொரு வினையிலும் குறைந்தது நமக்கொரு கூறும், பிறர்க்கு மூன்று கூறும் நலன் விளையுமாறு எண்ணிச் செய்தல் வேண்டும். நமக்கு ஒதுக்கப்படும் கூறைவிட, பிறர்க்கு ஒதுக்கப்பெறும் கூறு மிக மிக, நாம் பொதுநல உணர்வில் மேம்பட்டு விளங்குகிறோம் என்று பொருள். இவ்வுணர்வே தன்னல மறுப்புணர்வாகும். தன்னலமும் பொது நலமும் கருதிச் செய்யும் செயல்களில் அவ்விரு உணர்வுகளிலும் முன்னதைவிடப் பின்னதற்கு ஒருவர் எத்துணையளவு மதிப்பளிக்கின்றாரோ, அத்துணையளவு அவர் இவ்வுலகில் பொதுநலவுணர்வினராக மதிக்கப்பெற்றுப் பெருமையும் நிறைவும் பெறுகிறார். அத்தகையோரே வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் என்ற சிறப்பைப் பெற முடியும் மீதிப்பேர் வாழ்ந்தோராகவே கருதப் பெறமாட்டார்.

2. பொதுவுடமையும் பொதுமையும்

எனவே தாம் செய்யும் செயல்களில் நமக்கு எத்துணையளவு நலன் அல்லது பயன் என்றும், பிறர்க்கு எத்துணையளவு நலன் என்றும் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். நமக்காகவே வாழ்தல் மிகக் கீழ்மையானது. விலங்குத் தன்மையது. இன்னுஞ் சொன்னால் விலங்குகளுக்கும் கீழான தன்மையது. ஏனெனில் விலங்குகளும்