பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைத் தவிர்த்தல்

1. தொடக்கம், முடிவு பயன்

அவ்வாறு தொடக்கமும், முடிவும் இடையில் வரும் இடையூறுகளையும் ஆராய்ந்து அறிந்தபின், அல்லது வினை வல்லார் வாய்க் கேட்டு அறிந்தபின், அவ்வினையால் வரும் பயனையும் அதன் அளவையும் தேர்ந்துணர்ந்து, அதன் பின்னரே ஒரு வினையில் ஈடுபடுதல் வேண்டும். இதுவன்றி, நாம் இன்னொன்றையும் கூடவே கருதுதல் மிகவும் சிறப்புடையதாகும். அஃதாவது நாம் மேற்கொள்ளப் போகும் வினை, பொருள்வகையிலோ வேறுவகையிலோ மிகுந்த பயனைத் தருவது என்றாலும், அந்த வினையைப் பிறர் தாழ்வாக மதிக்கின்றார்களா உயர்வாகக் கருதுகின்றார்களா என்றும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். பிறர் இழிவாகக் கருதும் வினையைக் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். நமக்குப் பொருந்தாத - நாம் செய்யத் தகாத வினையை நாம் மேற்கொண்டு செய்தோமானால் உலகம் நம்மை மதிக்காது. ஏனெனில், நமக்கு, நம் அறிவு, பண்பு, ஊக்கம், ஆற்றல் இவற்றைக் கணித்து, ஏற்கனவே உலகம் ஒரு தகுதியைத் தந்திருக்கின்றது. இந்தத் தகுதிக்கு ஏற்பவே ஒரு செயலை நம்மிடமிருந்து அஃது எதிர்பார்க்கும். அந்தத் தகுதிக்குத் தாழ்வாக, நாம் கொள்ளக் கூடாத அல்லது செய்யக் கூடாத ஒன்றைச் செய்யத் தொடங்கினால் உலகம் நம்மை எள்ளி நகையாடும். இகழ்ந்து பேசும் ஒதுக்கிவிடும். எனவே நமக்குப் பொருந்தாத, அல்லது நம் நிலைக்குக் கீழான ஒரு செயலை நாம் மேற்கொள்ளவே கூடாது.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு

கொள்ளாத கொள்ளா துலகு

(470)

என்பது குறள்.

2. புகழ்ந்தவை போற்றிச் செய்தல்

இனி, இகழத்தக்க வினைகளை நாம் செய்யக் கூடாது என்பது மட்டுமன்று. புகழத் தக்க வினைகளையே நாம் செய்தலும் வேண்டும். புகழத் தக்க வினைகள்தாம் உண்மையான நன்மையைக் கொடுக்கும். அத்தகைய வினைகளைச் செய்வதில் நமக்குத் துன்பங்கள் இருக்கலாம். தொல்லைகள் இருக்கலாம். ஆனால் அவை கருதி நாம் அவற்றைத் தவிர்த்து விடல் கூடாது. எனவே, நன்மை தரவல்ல, பிறர் புகழ்ச்சிக்குரிய