பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

செயலும் செயல் திறனும்



விடுவதில்லை. அவ்வாறிருக்க, உயர்ந்த அறிவும் தெளிந்த மனவுணர்வும் திருத்தமான சிறந்த உறுப்புகளும் பெற்றுள்ள நாம் நம்முடைய முயற்சிகளால் நல்ல உயர்வான, பிறர் புகழத்தக்க வினைகளையே தேர்ந்து செய்தல் வேண்டும். இவ்வுலகின்கண் செய்யத் தகுந்த வினைகள் என்று சிலவுண்டு செய்யக்கூடாத வினைகள் சில உண்டு. அவற்றின் வேறுபாடுகளை நாம் அறிவுள்ள வழிகாட்டிகளின் வழியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் செய்யத் தகுந்த வினைகளைச் செய்யாமற் போனாலும், செய்யக் கூடாத வினைகளைச் செய்ய முற்பட்டாலும் நமக்கு இழுக்கு வரும் இழப்பு வரும். சிறப்பு கெடும். சீரழிவு நேரும் பிறகு நம் வாழ்க்கையே துன்பமுள்ளதாகப் போய்விடும். அதற்காக நாம் காலமெல்லாம் வருந்தி அழவேண்டியிருக்கும். இதைத்தான் குறளாசிரியர்,

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.

(466)

என்று கூறுகின்றார். எனவே முன்கூட்டியே செய்தக்க வினையும் செய்யத்தக்க அல்லாத வினையும் நன்றாகப் பிரித்துணர்ந்து செய்தக்க வினைகளையே மேற்கொண்டு செய்தல் வேண்டும்.

6. செய்யத்தகாதவற்றைத் தவிர்த்தல்

ஒருகால் நம் தேர்ச்சி தவறாகவிருந்து, செய்தக்க அல்லாத வினையைத் தெரியாமல் செய்யத் தொடங்கிப் பின் அதனால் வருந்தும்போது, இந்த வினையை நாம் ஏன் செய்தோம்; இதைப் பற்றி எவரையும் கேட்காமற் போனோமே என்று மனம் நெகிழ்ந்து, நம்மையே நொந்து கொள்கின்றோம். அந்நிலையில் இன்னொரு விழிப்புணர்வைத் திருவள்ளுவப் பெருந்தகை நமக்கு ஊட்டுகிறார். அஃதாவது, நாம் இதைப்பற்றி நன்கு ஆராயாமலும், அறிந்தவரிடத்தில் அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும் செய்துவிட்டோம். அதனால் இப்பொழுது வருந்தும்படி நேரிட்டு விட்டது. எனவே இது போன்ற செயல்களை இனிமேலாவது செய்யக் கூடாது. இப்பொழுதும் தவறாகத் தொடங்கிச் செய்யப் பெற்ற வேலையையும் இனி தொடரக் கூடாது. வேறு சிறந்த நல்ல, பெருமை தரக்கூடிய வேலையாகப் பார்த்துச் செய்ய முற்படுவோம் என்று எண்ணி, விழிப்படைந்து, அந்த வினைநிலையிலிருந்து விடுபட்டுவிடச் சொல்கிறார். விடுபடுவதுடன் இனிமேல் அத்தகைய வினைகளையே செய்யாமல் தவிர்த்துவிட வேண்டும். அதுதான் நல்லது என்கின்றார். அவ்வறிவுரை இது.

எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று

(655)

இனி, நமக்கென்று ஒரு வினையைச் தேர்ந்து, உறுதிப்படுத்திக் கொண்டோம். அவ்வளவில் அதனைத் தொடங்கிவிடலாமா என்ற கேள்விக்கு விடையாக அடுத்த நிலைகளைப் பார்ப்போம்.