பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. வினைவலிமை அறிதல்

1. ஆழந்தெரியாமல் காலை விடாதே!

எப்பொழுதும், பலர் இதைச் செய்வேன். அதைச் செய்வேன் என்று பெருமையாகப் பேசிக்கொண்டேயிருப்பர். ஆனால் ஒன்றையும் செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர் செய்வதாகச் சொல்லும் வினையின் தன்மை தெரியாது. அந்த வினை செய்வதற்கு நாம் தகுதியுள்ளவர்கள்தாமா? அவ்வளவு பெரிய வினையை நம்மால் செய்யமுடியுமா? என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. ஏதோ கையில் கொஞ்சம் பணம் கிடைத்தவுடன், ஏதோ ஒரு செயல் செய்ய வேண்டுமே என்பதற்காக அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ஒரு வினையை உடனே செய்யத் தொடங்கிவிடுவர். பின்னர் அந்த வினைகளின் சுமைகளையும், பெரும்பொருள் தேவையையும், உணர்ந்தவுடன், அடடா, ஆழந்தெரியாமல் காலை விட்டு விட்டோமே, இஃது இவ்வளவு, கடினமான வேலை என்று தெரியாமல் போனதே. இப்பொழுது நிறைய பொருள் தேவையாகவிருக்கிறதே. யாரிடம் போய்க் கேட்டது? யாரைத் துணைக்கழைப்பது? மேலும் இவ்வேலை இவ்வளவு உழைப்பை வாங்குகிறதே, ஒய்வொழிச்சலின்றிப் பாடாற்ற வேண்டியுள்ளதே! உண்ண நேரமில்லையே, உடுக்க நேரமில்லையே, மனைவி மக்களொடு பேச நேரமில்லையே, இரவில் நெடு நேர்ம் உழைக்க வேண்டியிருப்பதால் சரியாகத் துரங்கக்கூட நேரமில்லையே! ஐயோ! என்ன செய்வது? என்றெல்லாம், வினைச் சுமை தாங்காமல், அரற்றிக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப் பட்டவர்களை நோக்கித் திருவள்ளுவர், முதலில் ஒருவர் தாம் செய்யப் போகும் வினையினுடைய வலிமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பார்.

2. வினை வலிமை

ஒரு வினையைத் தொடங்குமுன் நாம் அளந்தறியும் ஆற்றல்களில் முதலாவது வினை வலிமை. அஃதாவது அந்த வினை எவ்வளவு வலிமையுடையது என்டது. அந்த வேலையில் ஈடுபட எத்துணையளவு பணம் வேண்டும். எவ்வளவு உழைப்புத் தரல் வேண்டும். அதை முடிக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என்றெல்லாம் ஆய்ந்து பார்க்க வேண்டும். சும்மா எடுத்த எடுப்பிலேயே வெறுங்கையால் முழம் போடத் தொடங்கிவிடக் கூடாது. கையில் போதுமான பணத்தை வைத்துக் கொள்ளாமல் கடன் வாங்கிச் செய்துவிடலாம் என்று எண்ணிவிடக்