பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

43



உழைப்பு, ஊக்கம் இவற்றில் தாழாமல் ஈடுபட்டு முன்னேறுவதைப் பற்றியே சிந்திக்க வேண்டும். உலகில் சிறப்பான முயற்சி, ஊக்கமுடையவர்களே வெற்றி பெறுகிறார்கள். நாமும் எப்பொழுதும் ஊக்க முடையவர்களாக இருத்தல் வேண்டும்.

2. தன்னை அறிதல்

ஆனால், நம்மை, நம் முயற்சியை, நம் திறமையை அளவுக்கு மீறி மதிப்பிட்டு, ஒரு வினையில் செயலில் இறங்கிவிடக்கூடாது. நம் திறமையைச் சரியாக மதிப்பிட்டுக் கொள்வதில்தான் நம் வெற்றியே அடங்கியிருக்கிறது. தம் திறமையைச் சரியாக மதிப்பிடாமல் அளவுக்கு மீறித் தம் ஆற்றலை மதிப்பிட்டுத் தம் வலிமைக்கு மீறிய வினைகளில் இறங்கி, ஈடுபட்டு அவ்வினைகளின் சுமை தாளாமல் இடையில் அவற்றை விட்டு வெளியேறி, மனம் உடைந்து போனவர்கள் இவ்வுலகில் மிகப் பலர் என்று திருக்குறள் அறிவுறுத்துகின்றது.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்

(473)

3. உண்மையான திறமையும் அறிவும் மதிக்கப்பெறும்

உலகில் அளவுக்கு மீறிய போட்டிகளும், பொய்ம்மைகளும் என்றும் இருப்பது இயல்பு. இவற்றுக்கிடையில் நேர்மையாளர்களும், உண்மையாளர்களும் பின்தங்கிப் போவதும் ஒரு வகையில் உண்மை. ஆனால், அதற்காகத் திறமை என்றுமே மதிப்பிழந்து போய்விடாது. திறமைக்கும் அறிவாண்மைக்கும் என்றுமே மதிப்பு உண்டு. உண்மையான திறமையையும் பொய்யிலாத அறிவையும் உலகம் போற்றவே செய்யும். எனவே, திறமையுடையவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் பொழுது, தங்கள் தகுதி நிலைகளை ஒருவாறு தாங்களே உணர்ந்து வெளிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் அளவுக்கு மீறித் தங்களை மதிப்பிட்டுக் கொள்ளக்கூடாது. அம்மதிப்பீட்டால் தங்களைத் தாங்களே வியந்து கொள்ளவும் அதனால் செருக்கடையவும் கட்டாது.

4. தன்னால் முடிந்ததில் ஈடுபடவேண்டும்

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

(474)

தன்னை வியந்து அளவுக்கு மீறி ஒரு வினையிலீடு படுபவர்கள், அவ்வினை கெடுதலால், தாமும் விரைந்து கெடுவார்கள் என்று எச்சரிக்கை கொடுக்கின்றது இக்குறள். எனவே தன் வலிமையைத் தான் உணர்ந்து, தன்னால் முடிந்த வினைகளில் மட்டும் ஒருவன் ஈடுபட வேண்டும். இரவு பகலாகக் கண்விழித்துச் செய்யும் வினைகளில், அதற்குத்