46
செயலும் செயல் திறனும்
வினையில் மிகுந்த கவனம் செலுத்துகின்றான். மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றான். எங்குத் தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சுகின்றான். எனவே அவன் வினையில் விழிப்பாயிருக்கின்றான். இல்லெனில் அவனுக்கு ஊக்கம் குறையும். கவனம் குறையும். எச்சரிக்கை இல்லாது போகும். இந்நிலையில் அவ்வினை வலுக் குறைந்து, வினை வெறுமை தோன்றுகின்றது. இவ்வினை வெறுமை உண்டாகாமல் இருக்கவே இயற்கை எதிர்ப்புகளை உருவாக்கி, அவன் ஊக்கத்தை மிகுதிப்படுத்தி, அவனை அவ்வினையில் மேன்மேலும் ஆழ்ந்து போகின்ற வல்லமையை உருவாக்கித் தருகின்றது.
3. எதிர்ப்பு பல முனைகளில் இருக்கும்
மாந்த முயற்சிகளில் இவ்வெதிர்ப்பு நிலை பல முனைகளிலிருந்து வரும். ஒருவனுக்கு அவன் செய்யும் வினைகளில் எதிர்ப்புத் தோன்றவில்லையானால், அவன் அவ்வினைக்குத் தகுதியுடையவனாக ஆகமாட்டான். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சுகின்றவன், அவன் தொடங்கிச் செய்கின்ற வினையை ஈடுபாட்டுடன் செய்ய மாட்டான். எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை ஒருவனுக்கு இருந்தாலொழிய, ஒருவன் ஒரு செயலில் படிந்து ஈடுபட முடியாது. எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் முயற்சிகளில் அதன் அறிவை இயற்கை பரவலாக்குகிறது. ஆழமுடையதாக்குகிறது. அதனால் மேலும் மேலும் அவ்வினையைச் செய்ய அறிவுடையனாகிறான்; ஆற்றலுடைய வனாகிறான்; அவ்வினையின் நெளிவு சுழிவுகளை யெல்லாம் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறான். ஒருவன் ஒரு வினையைத் தொடங்கும் பொழுதே, அது பற்றிய எல்லா நிலைகளையும் தெரிந்தவனாக இருப்பதில்லை. ஏதோ ஒர் ஊக்கத்திலும் ஆர்வத்திலும் தேவையிலும் ஒரு வினையை ஒருவன் தொடங்குகிறான். ஆனால் அவன் அவ்வினைக்கு முழுத் தகுதி படைத்தவனாக அப்போது இருப்பதில்லை. அவனை முழுத் தகுதி படைத்தவனாக ஆக்குவதற்கே இயற்கை அவனுக்கு எதிர்ப்புகளை உருவாக்குகிறது. அவன் அவ்வெதிர்புகளுக்குத் தன்னை ஈடுகொடுத்துக் கொண்டு, அவ்வினையில் மேன்மேலும் ஈடுபடத் தன்னை அணியமாக்கிக் கொள்கிறான். அவன் அவ்வினையில் மேலும் மேலும் ஈடுபட ஈடுபட, எதிர்ப்பு இன்னும் வலிவாகிக் கொண்டே வருகிறது. எதிர்ப்புகள் வலிவாக வலிவாக, அவன் மனவலிமையும் மிகுகிறது. உடல் வலிமையும் தோன்றுகின்றது. பல்வேறு அறிவு நிலைகளும் அவனுக்குப் புலப்படுகின்றன.
4. எதிர்ப்பு இயற்கை ஆசிரியன்
இயற்கை, இவ்விடத்தில் அவனுக்கு ஆசிரியனாக இருந்து கொண்டு,