பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

47



மறைமுகமாக, ஒரு வினையில் பலவகையான உத்திகளையும் அவனுக்குக் கற்பிக்கிறது. நாளடைவில் அவன் அத்துறையில் தெளிந்த அறிவுடையவனாகிறான். அவ்வினைக்குத் தகுதியுடையவனாகிறான். இயற்கையின் இந்த நுட்பமான போங்கு நிலையை ஒருவன் உணர்ந்து கொள்வானாகில், அவன் அவனுடைய முயற்சிகளில் எதிர்ப்படும் எதிர்ப்புகளையும் இடர்களையும் கண்டு கொஞ்சமும் மனம் சோர்ந்து போக மாட்டான். மாறாக அவன் எந்த நொடிப்பொழுதிலும், எந்தப் படிநிலையிலும் எதிர்ப்புகளையும் இடர்களையும் அவனே இரு கை நீட்டி எதிர்கொள்வான். ஏதோ இயற்கையின் நுணுக்கம் ஒன்றைக் கற்பிக்கவே அவ்வெதிர்ப்புகள் வருவதாக அவன் மன மகிழ்வு கொள்கிறான்.

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்

(627)

என்பார் திருவள்ளுவர். இடும்பைகள் (துன்பங்கள் அல்லது எதிர்ப்புகள்) மாந்தனாய்ப் பிறந்த ஒவ்வோர் உடல் இயக்கத்திற்கும் உண்டு. உடலை வருத்தித் துன்பந் தருவதே அவற்றின் இயற்கை கொள்கை. இதை அறிவினால் உணர்ந்து கொண்டு மனக்கலக்கம் கொள்ளுதல் கூடாது என்று இக்குறள் அறிவுறுத்துகின்றது.

5. இன்பத்தை மட்டும் நாடக்கூடாது

மேலும், உடம்பு இன்பத்தை மட்டுமே நாடக்கூடாது; இன்பத்தை நாடினால் வருந்துன்பம் சிறிதாயினும் மிகப் பெரிதாகத் தோன்றும். ஆகையால் எதிர்ந்து வருகின்ற பெருந் துன்பங்களையும் தடைகளையும், எதிப்புகளையும் இயற்கை என்று கருதி, அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை ஒருவன் கொண்டுவிட்டால், அவன் அவற்றால் துன்பப்படுவதும் இல்லையாகின்றது. இக்கருத்தைக் கீழே வரும் குறள் நன்கு எடுத்துக் கூறுகிறது.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்

(628)

எனவே இயற்கையால் வரும் இடுக்கண்களையும், மாந்தர்பாலிருந்து செயற்கையாக வரும் எதிர்ப்புகளையும் இடர்ப்பாடுகளையும் கண்டு ஒருவன் அஞ்சிவிடக் கூடாது. வினை செயலினின்று பின் வாங்கி விடக்கூடாது. ஒருவன் முனைந்து முன்னே செல்லச் செல்ல எதிர்ப்புகளும் துன்பங்களும் பின் வாங்கிப் போகும். துன்பத்திற்குத் துன்பம் வரும்படி நாம் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்

(623)

என்பார் திருவள்ளுவர். இதற்கு, 'மனத்திட்பமுடையராய் விடாது