பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

செயலும் செயல் திறனும்



முயலவே வினை முற்றுப் பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் என்று பரிமேலழகர் பொருள் எழுதுவார். வினையை எதிர்த்து வரும் இடும்பைகள் பற்றியும் இடுக்கண்கள் பற்றியும் துன்பம் பற்றியும் பின்வரும் வேறு தலைப்புகளில் இன்னும் விரிவாகப் பார்ப்போம். இங்கு, ஒரு வினைக்கு மக்களால் வரும் எதிர்ப்பு நிலைகள் பற்றி இன்னும் சிறிது விளக்கமாகப் பேசுவோம்.

6. எதிர்ப்புகள் எப்படி எங்கிருந்து வரும் ?

ஒருவனை வினை செய்ய முற்படுங்கால் அவனை நெருங்கியிருக்கும் சிலராலும், அவனை எதிர்த்து நிற்கும் பலராலும் அவனுக்குப் பல வகையிலும் எதிர்ப்புகள் தோன்றும் அவனை எதிர்க்கின்றவர்கள் அனைவரும் அவனுக்கு மாற்றார் ஆகிவிடுகின்றனர். மாறுபாடான எண்ணங்களுடனும் செயல்களுடனும் இயங்குகின்ற அனைவரும், அவர்கள் அன்பர்களாயினும், எதிரிகளாயினும் அவர்கள் மாற்றாரே. அவர்களைப் பற்றி, வினை செய்யப் புகுவார்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். அப்படிப் பட்டவர்களின் அறிவு வலிமை, செயல் வலிமை, உடல் வலிமை, கருவி வலிமை முதலியவற்றை நாம் முதலில் அளவிட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வலிமைகளை நாம் உணர்ந்து கொண்டால்தான் நம் வலிமைகளை அவற்றுக்கு மேலாகக் கொண்டு செலுத்தி, அவர்களின் எதிர்ப்புகளை முறியடிக்க முடியும் செயலிலும் இறுதியில் வெற்றி பெற முடியும்.

7. மாற்றான் வலிமையை உணர வேண்டும்

தன் வலிமையை ஒருவன் உணர்ந்து கொண்டால் மட்டும் போதாது. தன்னை எதிர்க்கின்ற, தன் செயலுக்கு எதிர்ச்செயலில் ஈடுபடுகின்ற மாற்றானின் வலிமைகளையும் நாம் கணித்தறிந்து தெரிந்து கொள்ளுதல் . வேண்டும். மாற்றான் வலிமையை ஆராய்ந்து வினை செய்தல் வேண்டும் என்பது திருக்குறள் (471), நம் செயலால் வரும் பயனை மட்டும் அளவிட்டு அச்செயலில் இறங்கி விடுதல் கூடாது. இடையில் வரும் இடையூறுகளையும் எண்ணிப் பார்த்துச் செயல் செய்தல் வேண்டும் என்பார் திருவள்ளுவர் (676)

நம் வினைக்கு மாற்றார் பிறர் எதிராக இருப்பதற்குப் பல கரணியங்கள் அடிப்படையாகவிருக்கும். அவர்கள் நம் மேல் கொள்ளும் பொறாமை, நம் வினையின் வளர்ச்சியால் அவர்கள் எய்தவிருக்கும் தளர்ச்சி, நம் அறிவூக்கத்தால் அவர்கள் கொள்ளும் மனக்காழ்ப்பு இதுபோல் பலவகையான அறிவு, மனம், செயல் தழுவிய கரணியங்களால், ஒரு செயலுகுக்குப் பிறரிடமிருந்து எதிர்ப்புகள் வருகின்றன. ஆனால் இக்கரணியங்கள் வெளிப்படையாகத் தெரியவரின், அவர்ளைப் பிறரும் அடையாளங் கண்டு கொள்வார்