பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

செயலும் செயல் திறனும்



முதலில் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். வெல்லம் காய்ச்சும் வேலையில் ஈடுபடவேண்டும் என்று முனைபவன், வெல்லந் தின்னுவதை மனத்தில் நினைத்துக் கொண்டு செல்லக் கூடாது. அதைக் காய்ச்சி எடுக்கத் தெரியும் திறனை வைத்துத்தான் செல்லுதல் வேண்டும்.

4. பொருளே குறிக்கோளாக இருத்தல் கூடாது

இக்காலத்தில் பயன் கருதியே பலரும் தொழிலில் ஈடுபடுகின்றனர். கல்வி நோக்கமும் அப்படித்தான் உள்ளது. எந்தத் துறைப் படிப்புப் படித்தால் அதிகச் சம்பளம் உள்ள வேலை கிடைக்கும் என்று கல்வி கற்கப் புகின்றனரே தவிர, தமக்குள்ள இயற்கையறிவை, உணர்வை உணர்ந்து அது தொடர்பான கல்வி கற்றால்தான் தம் ஊக்கம் வெற்றி பெறும் என்று நினைப்பதில்லை. மாணவர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் இதை நினைக்கத் தவறி விடுகின்றனர். எனவேதான், வாழ்க்கையில் பலரும் வெற்றி பெறுவதில்லை. பொருளைத் திருடியோ, ஏமாற்றியோ, கொள்ளை, கொலை செய்தோ ஈட்டுவது பெருமையன்று. அன்பில்லாமலும், தன்னை இழந்து கொண்டும், அறம் நோக்காமலும் ஈட்டிய பொருளை மற்றவர்களே கவர்ந்து கொள்வார்கள் என்பது உலக நெறி நூல் (1009). மேலும், அது கூறும் பின்வரும் கருத்துகள், பொருளை எவ்வாறேனும் ஈட்ட வேண்டும் என்னும் "கொள்கை"யுடையவர்கள் கவனிக்க வேண்டுபவையாகும்.

'பண்பிலான்' பெற்ற பெருஞ்செல்வம் பயன்தராமல் விரைவில் அழிந்துப போகும் (1000). தீதில்லாமல் வந்த பொருளே நல்ல செயல்களுக்குப் பயன்பட்டு, அறத்தையும் இன்பத்தையும் தரும் (754). அன்பில்லாமலும் அருளில்லாமலும் ஈட்டப் பெறுகின்ற செல்வப் பெருக்கம் தீது. அதை வரவேற்கக் கூடாது (755). மனச் சீர்மையில்லாதவர்களிடம் வந்து சேரும் செல்வம் எல்லாவற்றையும் அழித்தொழிக்கும் வேலையையே செய்யும் (1009) என்பன பொய்யாமொழியாரின் புகழுரைகளாகும்.

{{gap}எனவே, செல்வத்தை மட்டும் திரட்டும் நோக்கத்தில் கல்வியையோ, செயலையோ பயிலக்கூடாது. அறிவு நோக்கமும் அறநோக்கமும் செல்வப் பெருக்கத்தைப் பயனுடையதாக்கும். மகிழ்ச்சியுடையதாக்கும் என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆதலால், செயல் ஒன்று செய்ய நினைக்கும்பொழுது, அதனால் பணந் திரட்டுவதை மட்டும் முதல் நோக்கமாகக் கொள்ளுதல் கூடாது. பொருள் திரட்டுவதும் நோக்கங்கள் பலவற்றுள் ஒன்றாக இருக்கலாம் என்பது தவறாகாது. எனவே தான் வினையைத் தெரிந்து கொள்வது தான் வினை செய்யும் எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். வினைவலி எண்ணப் பெற வேண்டியவற்றுள் முதலானது என்று குறள் கூறும் கரணியதை நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.