பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

செயலும் செயல் திறனும்வேண்டியும் என்று கருதுதல் வேண்டும். இனி, நண்பனைத் துணை என்றது அவன் தான் செய்யப் புகும் வினைக்கு மனைவி போல் நெருங்கிய தொடர்புடையவன். அச்செயலால் வரும் ஊதிய இழப்பில் பங்கு கொள்ளற்குரியவன், தம் வினைக் கமுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளத் தகுதியுடையவன் என்பதன் பொருட்டே என்று தெளிதல் வேண்டும்.

9. தன்னலமற்ற அன்பும் அறிவும்

தனியாக வினை செய்வதுடன், ஒரு துணையொடு வினை செய்வது பொருள்நிலைக்கும் ஏற்றது. எனவேதான், துணை நலம் ஆக்கம் தரும் (55) என்று திருவள்ளுவர் கூறுவார். துணையிருந்து வினை செயத் தொடங்கினால் இழப்பிலும் பகுதி ஊதியம் ஆகும். ஆனால் வினைக்குத் துணையாக வருபவர் வெறும் வினைத் துணையாக மட்டும் இராமல் ஒரளவு நட்புணர்வும் கொண்டு விளங்குதல் வேண்டும். நட்புணர்வுக்கு அன்பே அடிப்படை, கரவான அன்பும், செருக்கான அறிவுணர்வும் என்றுமே வினைக்குத் துணையாக வருதல் இயலாது. தன்னன்பே அன்பு என்பது தன்னறிவே அறிவு என்பது போலும் ஒரு செருக்குணர்வினதே! உண்மை அன்புள்ளவனே பிறரையும் அன்புள்ளவர்களாகக் காண முடியும் அதுபோல் உண்மையான அறிவுள்ளவனே பிறரிடம் அறிவு இருப்பதாகக் கருத முடியும். அன்புக்கு எல்லையில்லை. அது பரந்துபட்டுப் பாயும் நீர் போன்றது. அதை எல்லைப்படுத்தி, அணைக்கட்டித் தேக்குங்கால் அது தன்னலமாக மாறுகிறது. அது போல அறிவுக்கும் எல்லையில்லை. அதுவும் பரந்துபட்டு எரியும் தீப் போல்வது. அதை எல்லைப்படுத்தி சுவர்கட்டி அடக்குங்கால் அதுவும் தன்னலத்திற்கே பயன்படுகிறது. தன்னலம் என்பது தனக்கும் தன்னைச் சார்ந்தவர்க்குமே பயன்படும் ஒரு குறுகிய உணர்வு எல்லைகளைத் தாண்டி வெளியே வந்து, பலருடன் ஊடாடுபவனே . உறவாடுபவனே - தன்னலமற்ற அன்பினனாகவும், தன்னலமற்ற அறிவுடையவனாகவும் இருக்க முடியும். அப்படிப்பட்ட மனப் பாங்குள்ளவனே வினைக்குத் துணையாகும் தகுதியுள்ளவன் ஆவான். அவனே வினைக்குத் தக்கவன். அவனே பிறரொடு கலந்து பழகும் தன்மையுள்ளவன். அவனே செயலுக்குரிய வாய்ப்பைப் பெற முடியும். உருவாக்கவும் முடியும்

10. பொதுவுணர்வு தேவை

செயல் என்பது ஒரு குறுகிய இடத்தில் மட்டும் அடங்குவதாக இருப்பின் அது பெரும்பாலார்க்குப் பயனளிக்காது. மாந்தனிடம் தோன்றும் எந்த உணர்வுமே பொதுவுணர்வாக மாறும் தன்மையுடையது. தான் ஒழுக்கமாக இருக்கும் உணர்வுடையவன், தன்னளவில் மட்டும் ஒழுக்கவுணர்வுள்ளவனாக இருந்தால் போதாது. தன்னைச்