பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

65செய்து கொண்டிருப்பான். அவனைப் பெரியவன் என்று மதிக்கலாமா? கூடாது என்பார் திருவள்ளுவர். ஒருவன் உயர்ந்த கல்வி கற்றிருப்பான். ஆனால் எல்லாரையும் ஏமாற்றிப் பணம் பறித்துக் கொண்டிருப்பான். அவனை உயர்ந்தவன், பெருமைக்குரியவன் என்று மதிக்கமுடியுமா? ஒருவன் பெரிய வளமனையில் குடியிருப்பான். அவனிடம் எடுபிடி ஆட்கள் நிறைய பேர் இருப்பார்கள். உயர்ந்த, சாரமுள்ள உணவு உண்டான். சிறந்த, விலையுயர்ந்த உடைகளையே உடுப்பான். போகவும் வரவும் சொகுசான ஊர்திகள் இருக்கும். இப்படிப்பட்டவன் பெருமைப்படுத்துவதற்குரியவன் ஆகிவிடுவானா? ஆகிவிடமாட்டான். அவன், இப்படியெல்லாம் இருப்பதால் மட்டும் பெருமைக்குரியவன் ஆக மாட்டான். அவன் அப்படி இருந்து கொண்டு, அல்லது இருப்பதற்கு என்ன செயல் செய்கின்றான் என்று பார்க்க வேண்டும். அவன் பெரிய சூதாட்டத் தொழிலை அல்லது ஆணும் பெண்ணும் குடித்துக் கும்மாளமடிக்கும் களியாட்டரங்கை நடத்தி, அவற்றால் பெரிய அளவு வருவாயை உடையவனாக இருப்பான். அப்படிப்பட்டவன் பெருமைக்குரியவனாவானா? ஒரு போதும் ஆகமாட்டான். இப்படிப்பட்டவர்கள். எப்பொழுதும், எவ்விடத்தும் இருக்கவே செய்வார்கள். இவர்கள் செய்யும் தொழில் பெருமைக்குரிய செயலும் அன்று. செய்வதற்கு அருமையானதும் அன்று! எளிமையுடையதும் இழிவானதுமாகும்! எனவே, அப்படிப்பட்ட செயலால் இவன் எவ்வாறு பெருமையுடையவனாக முடியும்? எனவேதான் திருவள்ளுவர் சொல்வார். ஒருவன் பெருமைக்குரியவன் என்பதும் சிறுமைக்குரியவன் என்பதும் அவன் செய்கின்ற தொழிலைப் பார்த்தால் தெரிந்துவிடும். அவன் தொழிலே அவன் தகுதிக்கு உரிய அளவுகோல் ஆகும் என்பது அவர் வாய்மொழி!

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல். (505)

6. வல்லவனுக்குப் புல்லும் வல்கருவி

இனி, தொழிலுக்குக் கை முதற்கருவியாக இருந்தாலும் வெறுங்கையைக் கொண்டே அனைத்துத் தொழிலையும் செய்துவிட முடியாது. கைக்கும் ஒரு கருவி தேவை. வீரனுக்கு வாளும், வில்லும் வேலும் தேவை. சில இடங்களில் இரண்டு கருவிகள் தேவைப்படும். ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் கேடயமும் தேவை. அதுபோல் ஒரு கை வில்லைப் பிடித்திருக்கும் பொழுது, பிறிதொரு கை அம்பை வைத்து நாணேற்றுதற்கு வேண்டும். இப்படியே, எழுதுதற்கு எழுதுகோலும், உழுவதற்கு ஏரும், மரம் வெட்டுதற்குக் கோடரியும், இன்னும் பல தொழில்களுக்கும் பல்வேறு கருவிகளும் தேவை என்பது நம் அனைவர்க்கும் தெரியும். வல்லவனுக்கு புல்லும் வல்கருவி