பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

75



கூடாது. சிலர் எவ்வாறேனும் பணத்தைச் சம்பாதித்து, நல்ல செயல்களைச் செய்ய எண்ணங்கொள்வார்கள். நல்ல செயல்களைச் செய்ய விரும்புபவர்கள், அவற்றை ஒரு கொள்கை நோக்கமாகக் கொண்டவர்கள். அச்செயல்களைச் செய்வதற்குரிய பணம் தவறான வழியில் கிடைப்பதாயின், அதனை விரும்பக் கூடாது, அதைத் தவிர்த்து விடல் வேண்டும் என்பார் திருவள்ளுவர்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் (113)

என்பது திருக்குறள்.

7. நேர்மையான வழி வரவு

நேர்மையாக வரும் பொருள் எந்தச் செயலைச் செய்வதன் வழி வரும்; எந்தச் செயலைச் செய்து பொருள் திரட்டக்கூடாது என்பதை அறிவுள்ளவர் அறவுணர்வு கொண்டவர்தாம் பிரித்து உணர முடியும். எனவே அறவுணர்வை - நடுநிலை உள்ளத்தைக் கொண்டவர்தாம் நமக்கு நல்ல வழியில் பொருளை ஈட்ட உதவுவார்கள். அவர்கள்தாம், அவ்வழியை நமக்கு அமைதியான அறிவுரையால், இனிமையான சொற்களால், நாம் மனங்கொள்ளுமாறு எடுத்துச் சொல்வார்கள். செயல் நிலைகளில் நமக்குத்துணையாக வருபவர்கள் நமக்கு ஓர் அமைச்சரைப் போல் நின்று வழிகாட்ட வேண்டும். அவர் கூறும் வழிகளில் நமக்குப் பொருள் வரும் என்றாலும், அவ்வழிகளும் நல்லனவாக, தீயவை அல்லாதவனவாக இருத்தல் வேண்டும். அந்த வழிகளை அவர் நமக்குக் காட்டுவதற்கு அவர் நேர்மையானவராகவும், அறவுணர்வு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும் அன்றோ? எனவே அறவழியை அறிந்து அதனை அமைந்த பட்டறிவால் நமக்கு அன்பாக எடுத்துக் கூறி நம்மை நல்ல நெறியில் கொண்டு செலுத்தும் திறமுடையவர்களையே நாம் வினைக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பது திருவள்ளுவப் பெருந்தகையின் கருத்து.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லால் எஞ்ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை (635)

என்பது அப்பொன்னுரை. எஞ்ஞான்றும் எப்பொழுதும், எந்த நிலையிலும், நமக்கு அவர் காட்டிய வழியில் ஒருகால் பொருளிழப்பு நேர்ந்தாலும், அல்லது இடர்கள் வந்து இன்னல் தந்தாலும் அவ்விடத்தும், அப்பொழுதும், நமக்கு நல்ல வழியினையே இறுதியாக நின்று காட்ட வேண்டியவராக இருப்பதால்தான் அவர் திறம் உடையவராக இருத்தல் வேண்டும் என்கிறார். திறம் உறுதிப்பாடு. உலகியல் நெறிமுறைகளை அறிந்த நல்லுணர்வு இழப்பு வந்தவுடன், நாம் கொண்ட நல்வழியை நெகிழ விட்டு, வேறு அல்வழியை, தவறான