பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

செயலும் செயல் திறனும்



வழியை அவர் காட்டிவிடக் கூடாது. கொள்கை உறுதியும் உலகியல் பட்டறிவும் அவர்க்கு இருந்தாலல்லது அவர் காட்டும் வழியில், அவர் துணையில் அவர் தொடர்ந்த ஓர் உறுதியை நமக்குக் காட்ட முடியாது. எனவேதான் நமக்குத் துணைவருபவரிடம், அல்லது நாம் வினைத்துணையாகக் கொள்வோரிடம் நல்லது தேரும் திறனும், செயலறிவும், உலகியலறிவும், அவற்றை நமக்கு அன்புடனும் அறிவுடனும் எடுத்துக் கூறும் அமைதித் தன்மையும், அத்தகைய சொல்திறனும் இவற்றில் நெகிழாத உறுதிப்பாடும் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நமக்குத் துணையாக, செயலுக்கு வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவருக்கிருக்கும் அந்தத் திறமைதான் செயல்முறை எனப்படும்.

8. செயலுக்குத் துணையாக வேண்டாதவர்கள்

செயல்முறை என்பது செயலைச் செய்கின்ற புறத்திறனை மட்டும் குறிப்பதன்று. அந்தச் செயலைச் செய்யும் திறமுடையவனின் அகத்திறனையும் குறிப்பதாகும். செயல் செய்யும் புறத்திறனால் அச்செயல் நன்கு செய்யப்படலாம். வருவாயும் நிறைய வரலாம். ஆனால் அச்செயலின் தன்மையை, மேன்மையை, சிறப்பை, அதால் வரும் உலக நன்மையை, தீமையில்லாத தன்மையை எண்ணிப் பார்த்தல் சிறப்பானது. அவற்றையும் எண்ணிப் பார்த்துச் செயல் செய்பவனைத்தான் செயல்திறன் உடையவன், செயல்முறை தெரிந்தவன் என்று கூற முடியும்.

கள்ள நாணயம் செய்தல் அல்லது தாள் அடித்தல், திருடுதல், கூட்டுக் கொள்ளையடித்தல், வழிப்பறி செய்தல், ஏமாற்றுதல், வஞ்சித்தல், கையூட்டுப் பெறுதல், கள்ளக் கடத்தல் செய்தல், வட்டி வாங்குதல், வெறிக்குடிப்புகளைக் காய்ச்சுதல், பெண்களைக் கொண்டு பணம் ஈட்டுதல், பொதுநலன்களுக்கு உகந்த பொருள்களைத் தவறாகத் தன் நலன்களுக்குப் பயன்படுத்தல் முதலியவற்றால் வரும் ஊதியங்கள், வருமானங்கள் தவிர்க்கத் தக்கனவாகும். அவற்றைச் செய்பவர்கள் தீயவர்கள், கொடியவர்கள், கயவர்கள், பொதுநலக் கேடர்கள், உலக நலங்கெடுக்கும் உலுத்தர்கள், தந்நலமே கருதும் தகவிலர்கள், குமுகாயக் கொலைஞர்கள் இவர்களைப் போன்றவர்கள் என்றுமே வினைக்குத் துணையாக வேண்டாதவர்கள். அவர்களுக்கு அறவுணர்வு இராது. நன்மை கருதும் எண்ணமிராது. உலக நலம் நாடும் உயர்ந்த நோக்கம் இருக்காது. மக்களுள் மாக்களாக இருப்பவர்கள் இவர்கள்! இவ்வகையினரைத்தாம் திருவள்ளுவச் சான்றோர் மக்களே போலும் கயவர்கள் (107) என்றார். 'தகவிலர்' (14) என்றார். இன்னும், தம் ஒப்பற்ற திருக்குறளில் அப்படிப்பட்டவர்களை, அவ்விய நெஞ்சத்தார். (69), 'அறனல்ல செய்வார்' (173) 'அன்பிலார்' (72) 'அறம் செய்வார்' (266), 'அறிவிலார்' (427, 430), 'அளவறிந்து வாழாதார் (479), 'அகத்தின்னா