பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

77



வஞ்சர்' (824), 'இசையிலா யாக்கையர்' (239), 'இனமல்லார்' (822), 'இசை வேண்டார்' (1003), 'இழிந்த மயிரனையர் '(964), உடம்பாடிலாதவர் (890), என்புதோல் போர்த்த உடம்பர் (80), ஒப்பிலார் (மாறுபட்டவர்) (800, 812), ஒட்டார் (பொருந்தாதவர்), (826), காரறிவாளர் (287), களவறிந்தார் (288, கீழ்கள் (10.75), கொடியர் (550), சிறியார் (970), சீரல்லவர் (977), நகைவகையர் (817, பண்பிலார் (81), பூரியர் இழிந்தவர், கீழ்மக்கள் (241, 918 பேதையர் (782, 797) மரம் போல்வர் (997), மக்கட் பதடி (பதர்) (196) மாணார் பெருமையில்லாதவர் (823), மெய்ப்பொருள் காணார் (857), வன்கண்ணவர் (228), வாழாதவர் (240), விளிந்தார் (செத்தவர்) (1430) முதலிய சொற்களால் குறித்து, அவர்களின் மனவுணர்வு, அறிவுணர்வு, செயலுணர்வு ஆகியவற்றில் உள்ள இழிவுகளையும், அவற்றால் அவர்களுற்ற தாழ்ச்சி நிலைகளையும் சுட்டிக் காட்டுவார்.

இத்தகவிலாரால் நமக்கு எத்துணையளவு ஊதியம், வருவாய், பொருள்கள், நலன்கள், வளவாழ்க்கை முதலியன கிடைப்பதாயினும், அவர்களை எவ்வகையிலும் நாம் துணைவர்களாகக் கொள்ளக்கூடாது என்பதை நன்றாக மனத்தில் இருத்திக் கொள்ளல் வேண்டும். அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் நமக்குக் கேடானவற்றையே பழுதான எண்ணங்களையே எண்ணுவர்.0 (639) அவர்களால் பெறுகின்ற பொருள் நலன்கள் எவ்வளவாயினும் அவற்றை நாம் துறந்துவிடல் வேண்டும். பண்பு உடைய செயல்கள் வழி வராத அச்செல்வம் தவறானது. துய்மையில்லாத கலத்தில் ஊற்றிய பாலைப் போன்றது (1000) என்பது திருக்குறள் கொள்கை. துன்பமே வருவதானாலும் அத்தகைய வருவாய்க்காக நாம் செயல்களை மேற்கொள்ளக்கூடாது. நல்ல அறிவுடையவர்கள் அவ்வாறான செயல்களை எந்தத் துன்ப நிலையிலும் செய்ய மாட்டார்கள்.

9. இழி செயல்கள்

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்

(654)

நடுக்கற்ற காட்சி - நடுக்கம் (அசைவு, நெகிழ்ச்சி) இல்லாத அறிவு. இளிவந்த செயல் - இழிவான செயல்கள், அவ் விழிசெயல்களின் வழியாக வந்த அல்லது வருகின்ற செல்வங்கள், பொருள்கள் இழிவான செயல்களை தீமை தரும் செயல்களைத்தாம் செய்ய உதவும். நல்ல செயல்களைச் செய்ய அப்பொருள் உதவுவதில்லை.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின்

(977)

தீதில்லாமல் வந்த பொருள்தான் அறச்செயல்களைச் செய்ய உதவும். இன்பம் காணத் துணைநிற்கும்.