பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80
செயலும் செயல் திறனும்
 


பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தையும், அதனை யொட்டிச் சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தையும், வைத்துள்ளார் மெய்ந்நூலறிவராகிய திருவள்ளுவர் பெருமான். இவ்விரண்டு அதிகாரங்களிலும் சில அரிய கருத்துகள் சொல்லப் பெறுகின்றன. அவற்றுள் தலையாய ஒரு கருத்தை நாம் நன்கு கவனித்தல் வேண்டும். மனம் எல்லாருக்கும் தொடக்கத்தில் பெய்யும் மழை நீரைப் போல் தூய்மையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்நீர் விழுகின்ற நிலத்தைப் பொறுத்து, அதன் தன்மைகள் திரிபடைந்து விடுகின்றன. சூழ்நிலையால்தான் தன்மைகள் அமைகின்றன என்று, பிற்காலத்து வளர்ந்த அறிவியல், மனவியல் அறிவால் கண்டுகாட்டிய தன்மையை, நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே, திருவள்ளுவப் பெருமான் உணர்ந்து கூறியது வியந்து போற்றுதற்குரியது.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு (452)

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல். (453)

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. (454)

மனந்துய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்துாய்மை துரவா வரும் (455)

மனந்துயார்க் கெச்சம்நன் றாகும் இனந்துரயார்க்
கில்லைநன் றாகா வினை. (456)

ஆகிய ஐந்து குறள்களின் கருத்துகளுள் உலகில் உள்ள மாந்தர்க்கு வேண்டிய மனவியலறிவின் அடிப்படை முழுவதும் சொல்லப் பெற்றுள்ளன. இவற்றை விரிக்கில் மிகவும் பெருகும். இவற்றின் ஆழ்ந்த உட்பொருள் மனத்தின் தன்மையால்தான் ஒருவர்க்கு உணர்வு, உரை, செயல், நன்மை, தீமை முதலிய அனைத்தும் விளைகின்றன என்பதாகும். ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் உணர்வை நாம் எளிதாக உணர முடியாது. ஆனால் அவரின் உரையால் (சொல்லால் நாம் அதனை ஒருவாறு அறியலாம். நிலத்தில் உள்ள அடிச்சுவடுகளைக் கொண்டு அவற்றுக்குரிய விலங்குகளையும் உயிரிகளையும் நாம் அறிந்து கொள்வது போல், ஒருவரின் சொற்களைக் கொண்டு, அவரின் மனஉணர்வையும், அவரின் தன்மையையும்அவற்றுக்கடிப்படையான அவரது மரபு நிலையையும் அறிந்து கொள்ளலாம் என்பார் திருவள்ளுவப் பெருந்தகை.