பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

83வேண்டியதில்லை. ஒரு மரம் நின்று கொண்டிருந்தால் நாம் எப்படி அதைப் பார்த்தும் பாராமல் போவோமோ, அதுபோல் அவரை நாம் பார்த்து மதிக்காமல் போகலாம் என்பது அவர் கருத்து.

ஒரு மரமானது, தன் கீழாக வேறு ஒரு மரத்தை வளர விடாது. அதற்கு வேண்டிய சாரத்தையும் இதுவே உறிஞ்சிக் கொள்ளும். பின்னர் அஃதெப்படி வளரும், அதுபோல் அறிவிருந்து பொது மக்களுக்கு நலஞ்செய்யும் பண்பில்லாதவன், அவ்வறிவின் திறத்தால், அதன் சூழ்ச்சியால், அவனைச் சுற்றியிருப்பவர்களையும் சுரண்டி வாழத்தக்கவனாகவே இருப்பான். அவர்களுக்கு நலஞ்செய்பவனாக இவன் இருப்பான் என்று சொல்ல முடியாது. இவனுண்டு. இவன் வேலைகள் உண்டு என்று இருப்பான். இவனும் இவன் குடும்பமும் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்றிருப்பான். பிறருடைய செயல்களைப் பற்றி இவன் கவனம் செலுத்த மாட்டான். செலுத்தினாலும் அவர்களைப் பற்றி அக்கறை காட்டமாட்டான். அவர்களின் செயல், நடைமுறைகள் இவைபற்றி எரிச்சல் அடைவான். மகிழ்ச்சியடைய மாட்டான். இத்தகையவனையே மக்கட் பண்பில்லாத மரம் என்று திருள்ளுவப் பேராசான் கூறுவார்.

14. எவ்வளவில் தேர்ந்தாலும் வேறாக இருப்பவர்கள்

இனி, ஒருவனை அன்பும் அறிவும் பண்பும் உடையவனாகக் காண்பதோடு மட்டுமின்றி, அறம், செல்வம் உடையவனாகவும் நாம் காணமுடியும். அத்தகைய நாம் விரும்பும், அல்லது நம் வினைக்கு வேண்டிய வகையில் அமைந்த சிறப்புக் கூறுகள் பல அமைந்தவனாக ஒருவன் இருந்து, அவனை நாம் நம் வினைக்குத் துணையாகக் கொண்டாலும், அவ்வினை நிலைகளில் பலவாறு மாறுபட்டு விடலாம் என்பார் திருக்குறள் பயந்த செம்மலார்.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

(514)

என்னும் வாயுரை அது.

எனவே, எல்லாத் தகுதியும் உடைய ஒருவரை நம் வினைக்குத் துணையாகக் கொள்வது அரிதினும் அரிதாகும். அத்தகையவர்களே உண்மையானவர்களாக இருத்தல் இயலும். அப்படிப்பட்டவர்களைத் திருக்குறளில் பல பண்புப் பெயர்களால் குறிப்பார் திருவள்ளுவப் பெருமான். அவர்களையே 'நல்லாற்றின் நின்ற துணை' (41) என்று பெருமைப்படுத்துவார். 'வாழ்பவர்' (5, 240) என்பார். 'சான்றோர்' (69, 115, 657) என்பார். இன்னும் அத்தகையவர்களை அன்புடையார் (72), 'பணிவுடையார்' (95), 'இன்சொல்லர்' (95), 'மாசற்றார்' (106, 311, 800),