பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

93போக முடியாதபடி ஒரு தடை வந்து, அந்தப் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்ள 6 மணிக்கே போக முடியாமற் போகுமானால், கொஞ்ச நேரம் காலந்தாழ்த்திப் போனாலும் அதனால் குற்றமாகிவிடாது. அவ்வாறு காலந்தாழ நேர்ந்ததற்குரிய அமைவை நாம் பொதுமக்களிடம் விளக்கிக் கூறி அவ்விழுக்கும் அந்நம்பிக்கைக் குறைவும் வராதவாறு காத்துக் கொள்ளவியலும். அதனால் நாம் செய்யப் புகுந்த வினை ஒன்றும் தடைப்பட்டு விடாது. இவ்வகையில் காலந் தவறுதல் அவ்வளவு கேடு தந்து விடாது.

ஆனால், நாம் சரியாக 6 மணிக்குச் செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தாக வேண்டும் என்றிருந்தால், கட்டாயம் நாம் 5 1/2 மணிக்கே நிலையத்திற்குப் போயாக வேண்டும். இனி, 5 1/2 மணிக்கு நாம் அங்குப் போய் சேர வேண்டுவதாக இருந்தால், நாம் வீட்டிலிருந்து 5 மணிக்கே புறப்பட்டாக வேண்டும். அப்பொழுது தான் நாம் வண்டி நிலையத்திற்குப் போய் முன்கூட்டியே சீட்டு வாங்கவோ, அல்லது ஒதுக்கப்பெற்ற இடத்தைத் தேடிப் பார்த்து அமரவோ முடியும். இங்குக் காலத்தாழ்ச்சி நமக்கு மிகக் கேடாகவும், நாம் செய்யவிருக்கும் வினைக்கு மிகவும் இடையூறாகவும் போய்விடுவது தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே காலங் கருதுதலை எந்தவிடத்தில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். எந்த இடத்தில் சிறிது கை நெகிழ்ந்தாலும் அதில் தளர்ச்சி காட்டினாலும் அதில் தாழ்வில்லை. எந்த இடத்திலும் காலத்தைத் தவறவே விடக்கூடாது, மாறாக, முன்கூட்டியே செயல்பட வேண்டும் என்றெல்லாம் நன்கு உணர்ந்து தேறுதல் வேண்டும் என அறிக.

8. காலத்தாழ்ச்சி எப்பொழுது இருக்கலாம்

காலத்தாழ்ச்சி அல்லது காலம் வரும் வரை அமைந்திருத்தல் என்பதுவும் கூடக் காலங்கருதுதல் என்னும் செயலுக்குள்ளேயே அடங்கும். காலத்தாழ்ச்சியோ கால அமைவோ, அந்தச் செயலை மேலும் நன்கு அஃதாவது இன்னும் திறம்படச் செய்வதற்குத்தான் பயன்படுவதாக இருக்க வேண்டுமே தவிர, அந்தச் செயலை நெகிழ்த்து விடுவதற்காக, அதில் மெலிவு தோன்றி விடுவதற்காக இருந்துவிடக்கூடாது.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து

(486)

என்பார் திருவள்ளுவப் பேராசான், சண்டைக்கு விட்ட ஆட்டுக்கடா, தன் முனைப்பில் சிறிது பின்வாங்குதல், காலத்தைச் சிறிது தளரத் தாழ விடுதல், ஏற்கனவே அந்த வினையின் பொருட்டுத் தான் கொண்ட உள்ள உறுதியை வலிமைப்படுத்தி, மேலும் முனைப்பாகத் தாக்குவதற்கே ஆகும் என்பது அவர் கருத்து. அஃதாவது முன்னினும் வலிவு