பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. உறுதி கொள்ளுதல்

1. உறுதியும் ஊக்கமும்

உறுதி என்னும் சொல் உறுதல் என்னும் வினைச் சொல்லை ஒட்டிப் பிறந்த சொல்லாகும். உறுதல் - உறுதி உறுதல் என்னும் சொல்லுக்கு, அடைதல், உண்டாதல், கிடைத்தல், கூடல், பொருந்துதல், சேர்தல், தங்குதல், வருதல், மிகுதல், ஒத்தல் முதலிய பொருள்கள் உண்டு.

ஒரு செயலைச் செய்யும் முன்னம் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உண்டாகும். அவ்வாறு உண்டான எண்ணம், அந்தச் செயல் செய்து முடிக்கப்படும்வரை உள்ளத்திலேயே தாங்கியிருத்தல் வேண்டும். இன்னும் சொன்னால் அந்த எண்ணம் உண்டாகி, தோன்றிய அளவோடு நில்லாமல், அந்தச் செயல் செய்து முடிக்கப்படும் வரை உள்ள கால நீட்டிப்பு, உழைப்பு மிகுதி, தேவை நிலைகள், எதிர்தாக்கங்கள் முதலியவற்றிற்கு ஏற்ற படி மேலும் மேலும் மிகுந்து வலிவாகிக் கொண்டே (அந்த உணர்வு) உள்ளத்தை விட்டுப் பெயராமல் அல்லது நீங்கி விடாமல் அல்லது குறைந்துவிடாமல் நிலைத்து நிற்க வேண்டும். அத்தகைய மிகுந்து வளரும் எண்ணத்தின் வலிவுணர்வுக்கே உறுதி என்று பெயர். இந்த உணர்வுக்கு ஊக்கம் என்று வேறு பெயரும் உண்டு. ஊக்குதல் - மிகுதல், அஃதாவது தோன்றிய அளவில் மெலியாது, மேலும் மேலும் வலிவு பெறுதல்.

2. எதிர் தாக்கம் ஏற்படுதல்

ஒரு செயலைச் செய்ய முற்படும் பொழுது அதற்கு வேண்டிய உழைப்பின் அளவு நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு பெரிய கல்லைப் பார்த்தவுடன் அதை நாம் ஒருவரே புரட்டி அல்லது அப்புறப்படுத்தி அல்லது தூக்கிவிடலாம் என்று கருதலாம். ஆனால் அதை நெருங்கி அசைத்துப் பார்த்த பின்தான் இன்னொருவரும் அதற்கு வேண்டும் என்பது நமக்குத் தெரியவரும் இனி, இன்னொருவருடன் முயல்கின்ற பொழுதுதான் மேலும் ஒருவர் தேவைப்படுவது தெரியும். இப்படி ஒருவர் இருவராக அசைத்தசைத்துப் பார்த்தபின் மொத்தம் ஐந்துபேர் வந்துதான் அதை நகர்த்தமுடியும் என்று ஒரு நிலை ஏற்படும். இதுதான். அந்த வேலையைச் செய்வதற்குரிய உழைப்பு அளவு. இந்த அளவைக் கண்டுபிடிக்க ஓரளவு காலத்தை நாம் செலவிட்டிருக்கிறோம்.