பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

97



இது நாம் நினைத்திருந்த காலத்திற்கும் மேலான காலத்தை எடுத்துக் கொண்டது. இது கால நீட்டிப்பு ஆகும். இந்த உழைப்பு அளவு முன்பே நமக்குத் தெரிந்திருந்தால் அந்தக் காலத்தை நாம் மீதி பண்ணியிருக்க முடியும் வேலையும் முன்னரே முடிந்திருக்கும்.

இனி, அந்தக் கல்லை ஐந்து ஆட்களைக் கொண்டு புரட்ட வேண்டி வந்து ஐந்து ஆட்கள் நமக்குக் கிடைக்காமல் போனால், இரண்டு ஆட்களையும் ஒரு கடப்பாரையையும் கொண்டு புரட்டி விடும்படி ஒரு நிலையும் இருக்கும். அப்பொழுது இரண்டு ஆட்கள் ஒரு கடப்பாரை நமக்குப் போதும். அது தேவைநிலை. அந்த நிலையும் நமக்கு முன்பே தெரிந்திருந்தால், மேலும் மூன்று ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அப்பொழுது காலம் இன்னும் நமக்குக் குறையும். முயற்சியும் குறையும்.

இனி, அந்தக் கல்லை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுதுதான் அது நிலத்தின் மேல் கிடப்பதாகத் தெரிந்திருக்கும். ஆனால் அதைப் புரட்ட முயற்சி செய்யும் பொழுதே, அது நிலத்தினுள் சில அடிகள் கீழே புதைந்திருப்பதும் நமக்குத் தெரிய வருவதாக வைத்துக் கொள்வோம். அதுதான் நம் செயலுக்கு நேர்ந்த எதிர் தாக்கம் ஆகும். அஃதாவது, நாம் ஒரு செயலை இயல்பாக எண்ணிச் செய்துவிட முயற்சி செய்கையில், நாம் நினைத்திராதபடி இயற்கையாகவோ, அல்லது ஓர் ஆள் வழியிலோ நமக்கு வரும் தடையோ, எதிர்ப்போ எதிர்தாக்கம் ஆகும்.

நாம் ஒரு செயலைச் செய்ய வெளியே புறப்பட்டுக் கொண்டிருப்போம். உடனே மழை வரும் புறப்பட முடியாமல் போகும். இஃது இயற்கை எதிர்தாக்கம் நாம் ஒரு வாணிகம் செய்ய ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்போம். அதே இடத்துக்குப் பக்கத்தில் இன்னொருவர் அதே வாணிகத்தைச் செய்ய முற்படுவார். அஃது ஆள் எதிர்தாக்கம். இவ்வாறன்றி வேறு ஒருவர் நம் மேல் பொறாமை கொண்டு அல்லது பகைகொண்டு, நாம் செய்ய எடுத்துக் கொண்ட செயலுக்கு முட்டுக்கட்டை போடுவார். அல்லது தடை செய்வார். அல்லது நம் வேலையைக் கெடுக்கும்படியான சூழலை உருவாக்குவார். இவையெல்லாம் ஆள் எதிர்தாக்கந்தாம்!

இவ்வாறு ஒவ்வொரு செயலுக்கும் அஃது எந்த வகைச் செயலாக இருந்தாலும், அதற்கு இயற்கையாகவும் செயற்கையாகவும் பல தடைகள், எதிர்ப்புகள், கேடுகள், தேவை நிலைகளில் பற்றாக்குறைகள், உழைப்பு அளவை நிறைவு செய்ய இயலாமை முதலிய நிலைகள் கட்டாயம் முழு அளவிலோ சிறு அளவிலோ நாம் எடுத்துக்கொண்ட வேலைக்குத் தக்கபடி வந்தேதான் தீரும் எதிர்ப்பு வராத எந்தச் செயலும் உலகத்தில்