பக்கம்:செவ்வானம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 123 அன்று திடீரென்று போனவள் மறுநாள் முழுவதும் அந்தப்பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. வருவாள், வருவாள் என்று எதிர்பார்த்த தாமோதரன் ஏமாற்றமடைய நேர்ந்தது மறுநாள். அதற்கடுத்தநாள்- தினந்தோறும் குமுதத்தின் வரவை எதிர்பார்த்தான் அவன். அவள் வரவேயில்லை. இவள் விசித்திர மானவளாகத்தானிருக்கிறாள். தானாக நினைத்துக்கொண்டு திடீர் விஜயம் செய்தாள். காரணமில்லாமல் அவளாகவே நின்றுவிட்டாள் என்று எண்ணிச் சிரித்தான். அவள் இன்று வரமாட்டாளா, இப்பொழுது வந்தாலும் வரலாம் என்று ஏக்கம் வளர்த்தது மனம், அவள் சிரிப்பு, அவள் பார்க்கும் நோக்குகள், நிற்கும் நிலைகள், அவளது அசைவுகள். பேச்சின் நயங்கள் எல்லாம் அவனது எண்ண உலகின் அழியா நிழல்களாக நிலைத்து நின்று அவனுக்கு மகிழ்வூட்டின. - திடீரென்று அவன் மனமே கண்டனக்குரல் எழுப்பும். நீ அவள் நினைவாகவே வாழ்வது தப்பு அவளைப்பற்றிய எண்ணங்களை ஏக்கமாக வளர்ப்பது தவறு என்றுதான். எனினும் குமுதத்தை மறந்துவிட முடியவில்லை அவனால் அவன் உடல் நிலை சரியாகி விட்டது. ஆனால் உள்ளத்தின் நிலைதான் சரியாகவில்லை, தாமோதரன் வழக்கம்போல் தனது காரியங்களைக் கவனிப்பதில் ஈடுபட்டான். அவனது காரியங்கள் என்ன தெரியாதா ஊர் சுற்றல், படித்தல், எழுதுதல், எண்ணக் குமுறல்களில் சிக்கி மெலிதல் முதலியனதான். குமுதம் தனக்குச் செய்த உதவிக்கு நன்றியறிவிக்கவேண்டும்: அவளுக்கு அன்பளிப்பாக ஏதாவது கொடுக்கவேண்டும். என்ன அளிக்கலாம்? அவள் வாங்கிக்கொள்வாளா? இவ்விதம் அநாவசிய மான பிரச்னைகளில் மனதைக் குழப்பிக் கொள்வது அவனது பொழுதுபோக்காகி விட்டது அடடா, இம்முறை கூட அவள் விலாசத்தை அறிந்து கொள்ளவில்லையே! என்று வருந்தினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/125&oldid=841334" இலிருந்து மீள்விக்கப்பட்டது