பக்கம்:செவ்வானம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 31 அவன் மனக் கலக்கம் தணியவில்லை. அதிகரிக்கத்தான் செய்தது. அவர்கள் ஏன் முன் வந்து தாக்கவில்லை? பதுங்கி நிற்கிறார்களா, பம்மிப் பம்மி ஓடிவிட்டார்களா? யோசியாமலே தான் கத்தியதற்குத் தனக்குப் புத்தி கற்பிக்கும் முறையிலே தாக்குவதற்காக அவர்கள் ஓடி வரவில்லையென்றால், அவர்கள் செயலிலே ஏதோ விபரீத அர்த்தமிருக்கிறது. அவர்கள் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? அவர்கள் யார்? - அவனது உள்ளம் ஆயிரமாயிரம் கேள்விகள் துள்ளும் சுனையாக மாறிவிட்டது. ஆனால் எதற்கும் விடை பிறக்கும் வழிதான் இல்லை. அவன் காத்து நின்றான். நேரம் சாவகாச நடை நடப்பதாக எண்ணினான் அவன். அங்கு நிற்பதும் ஆபத்து என்று நினைத்த தாமோதரனின் மனம் முன்னாலோ, பின் காட்டியோ நடப்பதும் அதிக ஆபத்தான செயலேயாகும் என்று போதித்தது என்ன செய்வது? என்ன செய்யவேண்டும்? மீண்டும் கூச்சலிடலாமா? வீட்டுக்குள் போய் விடலாமா? அறைக்குள் போய் கதவடைத்துக் கொண்டால், அவர்கள் கும்பலாக வந்து முற்றுகையிட்டு ஏதாவது விபத்து ஏற்படுத்தினால்? அவர்கள் எத்தனை பேரோ? இரண்டு குரல்கள்தான் கேட்டன. எனினும் வேறு பலர் பதுங்கி நிற்கலாமல்லவா? - அவன் மூளை குழம்பி விடும்போலிருந்தது. அவள் கதி என்னவாகும்? அவள் இருட்டிலே தனியாக நடந்து போய்விடுவாளா? இந்தக் கயவர்கள் அவளைத் தொடர்ந்து சென்று ஏதாவது தீங்கு செய்தால்? ஐயோ, பாவம் அவளை அப்படி விரட்டியிருக்கக்கூடாது - நானா விரட்டினேன். இல்லையே. அவள் இந்த இடத்திலேயே இரவு முழுவதும் நின்றாலும் ஆபத்து தானே. 'நான் கதவைத் திறந்துகொண்டு வெளியே வராமலே இருந்திருக்கலாம்! . . . . - சே, அது சரியல்ல. அப்பொழுது என்னென்ன விபரீதங்கள் விளைந்திருக்குமோ அவள் கிணற்றில் விழுந்து செத்திருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/33&oldid=841396" இலிருந்து மீள்விக்கப்பட்டது