பக்கம்:செவ்வானம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையைப் பற்றி அன்பு உறவிலே பூத்த மலர் கன்னி குமுதம். ஆனால் அவளை 'விபசாரத்தின் விளைவு' என்று குற்றம் சாட்டியது சமூகம், சமூகத்தின் குள்ள நரிகள் அவளை விபசாரத்திற்குரிய பொருளாக மதிக்கத் துடித்தனர். நேர்மையின் உருவம் அவள், நற்குணங்களின் மலர்ச்சி அவள், குமையும் உள்ளம், இருண்ட வாழ்வு, துணையில்லாத் தன்மை இவற்றால் துவண்ட பூங்கொடி அவள். புனிதையாக வாழ விரும்பியவள் அவள். ஆயினும் வாழ்க்கை வசதிகள் வஞ்சிக் கப்பட்டே வந்தன. தனது வாழ்க்கையிலேதான்தீய்ந்து கருகிக்கொண்டிருந்தாலும், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பெற்ற பிறருக்காக இரங்கும் அன்பு இதயம் படைத்தவன் தாமோதரன். சீறும் சிந்தனை, சிரிக்கும் பண்பு, வாழும் நம்பிக்கை கொண்ட இளைஞன் அவன். சாக வந்த குமுதத்தை வாழ விரும்பியதாமோதரன் சந்தித்தான். அவன் பாதையில் அவள் குறுக்கிட நேர்ந்தது. அவ்வேளையில்தான் அவர்கள் வாழ்க்கையே கதைச்சுவை பெறத் தொடங்கியது. அவர்கள் வாழ்விலே புதியதோர் உதயத்தின் செவ்வானச் சிரிப்பு மிளிர்ந்தது. குள்ள மனத்தினரின் நெடுமூச்சு பனிப்படலங்களாக புகையாமலில்லை. அப்புறம் நிகழ்ந்த உளப் பரிசோதனைகளும், சம்பவச் சிக்கல்களும் அதிகச் சுவை உள்ளவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/5&oldid=841414" இலிருந்து மீள்விக்கப்பட்டது