பக்கம்:செவ்வானம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 83 உள்ளக் குமுறலுக்கு அதிகக் கொதிப்பு ஏற்படுத்தியது குமுதத்தின் வரலாறு. அவன் இதயம் அந்த அபலைப் பெண்ணுக்காக வருந்தியது. அவளது வாழ்க்கையை எண்ணி அனுதாபப்பட்ட தாமோதரன் அவள் எதிர்காலத்தை வளமுள்ளதாக்கத்தன்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கவும் திண்டாட்டமே பிறந்தது. அவளை வாழவைப்பது எப்படி? கெளரவமாக, தன்மான உணர்ச்சிக்கு இழுக்கு வராது போதிய வசதிகளுடன் அவள் வாழவேண்டும். அதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யலாம். விடை கிட்டவில்லை அவனுக்கு அவளுடன் பேசி அவளது எண்ணத்தையும் அறியவேண்டும். அவளை எங்கே எப்போது பார்க்கலாம்? திட்டமாகச் சொல்லமுடியாது. பின் என்ன செய்வது? - இக் குழப்பம் தீர, எங்காவது சுற்றி வரலாம் என்று கிளம்பினான். பொழுது போகாத வேளைகளில், வேலை செய்ய முடியாத சமயங்களில், மனப்புழுக்கம் அதிகமாகி விடுகிற போதெல்லாம் அவன் ஊர் சுற்றக் கிளம்பி விடுவான். எங்கே, ஏன் என்ற அவசியமற்று அவசரம் சாவதானம் எனும் காலக் கட்டப்பாடுகளற்று இஷ்டம் போல் சுற்றித்திரிவதில் - எதிரே வரும் ஆட்களையும் பின்னிருந்து வந்து தன்னைக் கடந்து செல்கிறவர்களையும் கவனித்தும் கவனியாமலும், சுற்றுப்புறங்களை மறக்காமல் ஆனால் அதன் ஆட்சியிலே, அசைவிலே, அசையாமையிலே, வேகம் பரபரப்பு முதலிய இயக்கங்களிலே பட்டுத் தான் என்கிற தனித்துவத்தை இழந்துவிடாமல் சுற்றி அலைவதில் அவனுக்குத் தனி மகிழ்வு. அன்றும் அவ்விதமே கிளம்பினான். அப்பொழுது மணி ஒன்பதுக்கு மேலாகிவிட்டது. இரவின் மோகன சக்தியும் மோனநிலையும் ஊர் முழுதும் கவிந்து கிடந்தன. அவற்றின் அழுத்தத்தைக் கெடுப்பது போல அவ்வப்போது பாய்ந்து செல்லும் ஒரு சில கார்கள், தளர் நடை நடக்கும் பிராணிகள் தவிர வேறு உயிரியக்கம் இல்லை வீதிகளிலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/85&oldid=841453" இலிருந்து மீள்விக்கப்பட்டது