பக்கம்:சேக்கிழார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16சேக்கிழார்


கொண்ட ஒரு சிறிய கிராமமாக இருக்கிறது. தெருக்களில் பல பாழடைந்த கட்டடச் சுவர்களும் மேடுகளும் பள்ளங்களும் அவ்வூரின் பழைமையை மெளனமாக உணர்த்தி நிற்கின்றன. நத்தத்தில் சேக்கிழார் கோவில் இருக்கின்றது. அது மிகச் சிறிய கோவில். அக்கோவிலில் நாள்தோறும் பூசை நடைபெறுகின்றது. அக்கோவில் உள்ள இடமே சேக்கிழார் மாளிகை இருந்த இடமாகும் என்று அங்குள்ளவர் கூறுகின்றனர்.

சேக்கிழார் கோவிலுக்கு எதிரில் இரண்டு பழைய கோவில்கள் இருக்கின்றன. ஒன்று சிவன் கோவில்; மற்றொன்று பெருமாள் கோவில். பெருமாள் கோவில் முக்காற்பாகம் அழிந்து விட்டது. அக்கோவிலில் பெருமாளின் பெயர் திருவூரகப்பெருமாள் என்பது. சிவன் கோவில் ஓரளவு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு கோவில்களிலும் பழைய காலக் கல்வெட்டுகள் இருக்கின்றன. மலை மீதுள்ள முருகர் கோவில் சேக்கிழார்க்கு மிகவும் பிற்பட்டது.

பாலறாவாயர் குளம்

சேக்கிழார் கோவிலை அடுத்து ஒரு குளம் இருக்கிறது. அதனை அமைத்தவர் பாலறாவாயர் என்பவர். அவர் சேக்கிழார்க்குத் தம்பியார் ஆவர். ‘பாலறாவாயர் குளம்’ என்பது இப்பொழுது ‘பல்லவராயர் குளம்’ என்று வழங்குகிறது. அக் குளம் இப்பொழுது கவனிப்பவர், இல்லாததால் சீர்கெட்டுக் கிடக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/18&oldid=492404" இலிருந்து மீள்விக்கப்பட்டது