பக்கம்:சேக்கிழார்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 21


ஆகும். சேனைத் தலைவர், மாநிலத் தலைவர், அமைச்சர் இவர்கட்கே இப்பட்டம் பெரும்பாலும் வழங்கப்பட்டு வந்தது.

குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியினர்

குன்றத்தூரில் தங்கி இருந்த சேக்கிழார் குடியினர் நமது சேக்கிழார் கால முதலே அரசாங்கத்தில் சிறப்புப் பெறலாயினர். நமது சேக்கிழார்க்கும் பிறகு அவர் தம்பியார்- பாலறாவாயர் முதலிய பலர் சிறந்த பதவிகளில் இருந்து சிறப்புப் பெற்றனர்.

சேக்கிழார் பிறப்பு

நமது சேக்கிழார் கி. பி. பதினோராம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சிறந்த சிவ பக்தர்கள்; கல்வி கேள்விகளில் வல்லவர்கள்; நல்ல ஒழுக்கம் உடையவர்கள். அவர்கட்கு நெடுநாளாகப் பிள்ளை இல்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் தம் வழிபடு கடவுளாகிய சிவபெருமானை உருக்கத்தோடு வேண்டி வரம் கிடந்தனர்; பல தலங்கட்குச் சென்று தொழுது வந்தனர் ; பல தீர்த்தங்களில் நீராடினர். பின்னர் இறைவன் திருவருளால் அவர்கட்கு நமது சேக்கிழார் பிறந்தார். பெற்றோர் அந்த ஆண் குழந்தைக்கு அருள்மொழித் தேவர் என்று பெயரிட்டனர். அருள்மொழித் தேவர் என்பது சிவபெருமான் பெயர்களில் ஒன்றாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/23&oldid=492393" இலிருந்து மீள்விக்கப்பட்டது