பக்கம்:சேக்கிழார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50 சேக்கிழார்


சோக்கிழார் யாத்திரை - குறிப்புகள் தயாரித்தல்

காவிரியாற்றின் இரண்டு கரைகளிலும் பல நகரங்கள் உண்டு. அவற்றில் சிவன் கோவில்கள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை பாடல் பெற்ற தலங்கள். சேக்கிழார் அரசாங்க அலுவலைக் கவனித்துக் கொண்டே பாடல் பெற்ற கோவில்களையும் நன்றாகக் கவனித்தார்; அவை இருந்த ஊர்கள் - நாடுகள் - ஊர்களின் வளமை இவற்றை ஆராய்ந்தார்; ஓர் ஊர் ஒரு நாயன்மார் பிறந்த ஊராக இருந்தால் அங்குத் தங்கி, அந்த நாயனாரைப் பற்றிய தல வரலாற்றைக் கேட்டு அறிந்தார்; அவ் விவரங்கள் எல்லாவற்றையும். குறிப்பு எடுத்துக் கொண்டார்.

சேக்கிழார் இவ்வாறு ஆற்றோரம் அமைந்திருந்த பெரிய பாதைகள் வழியே சென்று, இக் கரையில் இன்ன கோவிலுக்குப் பிறகு இன்ன கோவில் அமைந்திருக்கிறது. இக் கோவிலில் திரு நாவுக்கரசர் இன்ன பதிகம் பாடினார், திருஞான சம்பந்தர் இன்ன பதிகம் பாடினார், சுந்தரர் இன்ன பதிகம் பாடினார் என்பன போன்ற விவரங்களைக் குறித்துக் கொண்டார்; நாயனார் பிறந்த ஊரில் அந்த நாயனார் வரலாறு கேட்டு அறிந்தார். அவ்வூர்க் கோவிலில் இருந்த அவரது உருவச் சிலையை ஆராய்ந்து குறிப்புகள் தயாரித்தார். அந்தக் கோவிலைப் பற்றிய பல செய்திகளையும் குறித்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/52&oldid=491964" இலிருந்து மீள்விக்கப்பட்டது