பக்கம்:சேக்கிழார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54சேக்கிழார்


மகளை மணந்து கொண்டான். அவன் அம் மணத்திற்குப் பிறகு அரசியல் காரியங்களைக் கவனிப்பதில்லை. அவன் தன் அமைச்சருள் ஒருவனான கட்டியங்காரன் என்பவனிடம் அரசியலை ஒப்பு வித்தான்; அவனை முழுவதும் நம்பி இன்பமாகப் பொழுது போக்கி வந்தான்.

கட்டியங்காரன் நயவஞ்சகன்; பேராசைக்காரன். அரசனைக் கொன்று அரசைக் கவர எண்ணினான்; படைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டான்; மற்ற அமைச்சர் கூறிய நல்லுரை களையும் கேட்கவில்லை. அவன் ஒரு நாள் திடீரென்று அரண்மனையை நோக்கிப் படையெடுத் தான். சச்சந்தன் கர்ப்பவதியான தன் மனைவியை [குறிப்பு 1]மயில் வாகனம் ஒன்றில் ஏற்றி ஆகாய வழியில் அனுப்பி விட்டான். பிறகு அவன் தன் அரண்மனை வீரருடன் கட்டியங்காரனை எதிர்த்தான்; போரில் அந் நயவஞ்சகனால் கொல்லப் பட்டான். உடனே கட்டியங்காரன் வெற்றி முழக்கத்துடன் அரியணையேறினான்.

வானத்திற் பறந்து சென்ற இராசமாதேவி முரசொலி கேட்டாள்; தன் ஆருயிர்க் காதலன் மடிந்தனன் என்பதை உணர்ந்தாள். உடனே மூர்ச்சை ஆனாள். அதனால் வாகனம் மேலே செல்லும்படி முறுக்காணியைத் தக்கவாறு திருப்பத் தவறினாள். உடனே விமானம் கீழே இறங்கி விட்டது. அஃது இறங்கிய இடம் சுடுகாடு; அதுவும் தலைநகரத்தின் சுடுகாடே ஆகும்.


  1. மயில் உருவத்தில் செய்யப்பட்ட ஆகாய விமானம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/56&oldid=491968" இலிருந்து மீள்விக்கப்பட்டது