பக்கம்:சேக்கிழார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64சேக்கிழார்


பரவசம் அடைந்தான். அவன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் அரும்பியது. அவன் மற்றவர் வரலாறுகளையும் கூறும்படி வேண்டினான். புலவர் பெருமான் நாள் தோறும் அவ் வரலாறுகளைக் கூறி வந்தார்.

புராணம் பாட வேண்டுதல்

அரசன் உண்மைச் சைவன் அல்லவா? அவன் மனத்தில் பெரியதோர் மாறுதல் உண்டாயிற்று. சேக்கிழாரைக் கொண்டே நாயன்மார் வரலாறுகளைப் பெரியதோர் புராணமாகப் பாடி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தான். ஆதலின் அவன் எழுந்து அமைச்சரை மார்புறத் தழுவி, “பெரியீர், உம்மை அமைச்சராகப் பெற்ற நான் பாக்கியம் செய்தவனானேன். நம் சைவ சமயத்துக்காக அரும்பாடு பட்ட பெரியோர் வரலாறுகள் ஒரு காவியமாக வர வேண்டும் என்று எனக்கு நெடு நாளாக எண்ண முண்டு. ஆனால் அதற்கு உரிய முயற்சியும் உழைப்பும் அதிகம் வேண்டுமே அப் புணியை மேற்கொள்பவர் யாவர் என்று எண்ணி ஏங்கினேன். என் பிறவி இன்று பயன் பெற்றது. தாங்களே அடியார் வரலாறுகளை ஒரு புராண மாகப் பாடித் தருதல் வேண்டும். சைவ உலகம் நல்வழிப்பட என்றென்றும் தங்கள் பெயர் இருக்கத் தக்கவாறு திருத்தொண்டர் புராணம் பாடி அருளுக!” என்று வேண்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/66&oldid=492367" இலிருந்து மீள்விக்கப்பட்டது