பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சேதுபதி மன்னர் வரலாறு

சென்னை கபாலீஸ்வரர் கோயில் இறைவர் பவனி வருவதற்காகவும், காளையார் கோவில் காளைநாதர் கோவிலுக்கும் புதிய பல்லக்குகளைச் செய்து கொடுத்ததுடன் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி உலா வர வெள்ளித் தேர் ஒன்றினையும் செய்து வழங்கினார். இராமநாதபுரம் ராஜேஸ்வரி அம்மன் பயன்பாட்டிற்காகச் சிம்ம வாகனம் ஒன்றினை அமைத்து அதனை முழுதுமாக தங்கத் தகட்டினால் நிறைவு செய்து அகமகிழ்ந்தார். மேலும் ராஜேஸ்வரி அம்மன் கோயில் கோபுரத்தையும் பொன் தகடுகளால் வேய்ந்து உதவினார். இவரது காலத்தில் தான் இராமேஸ்வரம் திருக்கோயிலின் முதலாவது குட முழுக்கு 1.11.1902-ல் நடைபெற்றது.

இவைகளையெல்லாம் விஞ்சிய சாதனை ஒன்றையும் படைத்தார். அதாவது 14.9.1893-ஆம் நாள் அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் நடைபெற்ற அனைத்து உலக சமயப் பேரவைக்குச் சுவாமி விவேகானந்தரைத் தனது சொந்தச் செலவில் அனுப்பி வைத்து நமது நாட்டின் பழம் பெருமையினை உலகு அறியச் செய்ததாகும்.

இவரது பாடல்கள் ஆலவாய்ப் பதிகம், இராமேஸ்வரர் பதிகம். காமாட்சி அம்மன் பதிகம். இராஜேஸ்வரி பதிகம் ஆகியன மட்டும் கிடைத்துள்ளன. மேலும் 14.9.1901-ல் மதுரை மாநகரில் வள்ளல் பாண்டித்துரை தேவர் நான்காம் தமிழ்ச்சங்க நிறுவ அவருக்குத் தக்க துணையாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் ஒரு சிறந்த சைவ சித்தாந்தியாக இருந்து வந்ததால் இராமநாதபுரம் அரண்மனையில் இவரது முன்னோர்களால் பிரதிட்டை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த பூரீ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்று வந்த உயிர்ப் பலியினை இவரது மனம் பொறுத்துக்கொள்ள வில்லை. ஆதலால் அப்பொழுது கர்நாடக மாநிலத்தில் சிறப்புற்று விளங்கிய சிருங்கேரி மடாதிபதியான ஸ்ரீ நரசிம்ம பாரதி அவர்களை வரவழைத்து இராஜேஸ்வரி ஆலயத்தின் உயிர்ப்பலி வழிபாட்டினை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.

அந்த ஆலயத்திற்கு வருகை தந்த சிருங்கேரி சுவாமிகள் புதிய சக்கரம் ஒன்றை கருவறையில் ஸ்தாபித்து, ஏனைய திருக்கோயில்களில் நடைபெறுவது போன்ற வாம பூஜையை அங்கும் கைக் கொள்ளுமாறு அர்ச்சகர்களுக்கு அறிவுறுத்தினார். அன்றிலிருந்து அந்த ஆலயத்தில் உயிர்ப்பலி கொடுப்பது நிறுத்தப்பட்டது.

சிருங்கேரி மடாதிபதிகள் மன்னர் பாஸ்கர சேதுபதியின் ஒய்வு மாளிகையான சங்கர விலாசத்தில் தங்கியிருந்த பொழுது நிகழ்ந்த மிகவும்