பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

109

ஆதரவுக்கு உரியதாக விளங்கியது. அரண்மனை வளாகத்தில் அமைக்கப் பெற்ற கலையரங்கில் ‘முத்து விஜய ரெகுநாத விஜயம்’ என்ற தெலுங்கு நாடகம் நடித்துக் காட்டப்பெற்று அந்த நிகழ்ச்சியில் கலைஞர்கள் மன்னரால் பாராட்டப் பெற்றனர்.

2.அ. முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆட்சியில் கிழவன் ரெகுநாத சேதுபதி அமைத்த கொலு மண்டபத்தின் அனைத்துச் சுவர்களும் துண்களுக்கு இடையிலுள்ள வில் வளைவுகளும் அழகும் கவர்ச்சியும் மிக்க வண்ண ஒவியங்களால் தீட்டப் பெற்றது.

2ஆ. இந்த மன்னரை இராமேஸ்வரம் தலயாத்திரை வந்து திரும்பிய மதுரை நாயக்க மன்னர் முத்து விஜய ரங்கசொக்க நாயக்கர் இந்த மண்டபத்தில் ரத்தினாபிஷேகம் செய்து பெருமைப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி பற்றிய ஓவியமும், கொலு மண்டப ஓவியங்களில் காணப்படுகிறது.

3. கி.பி. 1803 முதல் இராமநாதபுரம் ஜமீன்தாரியின் தலைவியாக இருந்த இராணி மங்களேஸ்வரி நாச்சியார் அவர்களது ஆட்சிக்காலத்தில் லண்டனிலிருந்து வந்த ஜார்ஜ் வாலன்டினா பிரபு என்பவர் இராணியாரைச் சந்தித்தார். இராணியாரைப் பற்றிய அவரது கருத்துக்களும் அவரது நூலில் குறிப்பிப்பட்டுள்ளது.

4. கி.பி. 1658 முதல் கொண்டாடப் பெற்ற நவராத்திரி விழா அரண்மனையில் கலை விழாவாக கி.பி. 1865 முதல் மன்னர் துரைராஜா முத்துராமலிங்க சேதுபதியினால் மாற்றப் பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முதல் ஒன்பது நாட்கள் தமிழ்ப் புலவர்களையும், வடமொழி வித்தகர்களையும், இசைக் கலைஞர்களையும், நாட்டிய நங்கைகளையும் வரவழைத்து அவர்களது கலைப் பயிற்சியையும் திறமையையும் சேது நாட்டு மக்கள் அறிந்து மகிழுமாறு அந்தக் கலை மேதைகள் சிறப்பாகக் கவுரவிக்கப்பட்டனர்.

5. இத்தகைய நிகழ்ச்சி மன்னர் பாஸ்கர சேதுபதி ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளின் போது தஞ்சை வைகை கிராமத்தைச் சேர்ந்த பாடகர் மகா வைத்தியநாத ஐயர் அவரது இளவல் இராமசாமி சிவன், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், திருக்கோடிக்கா கிருஷ்ணய்யர், குன்னக்குடி கிருஷ்ண ஐயர், புதுக்கோட்டை மாமுண்டியா பிள்ளை, மைசூர் சேசன்னா, டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர். பழனி மாம்பழக் கவிராயர், யாழ்ப்பாணம் சிவசம்பு கவிராயர், மகாவித்துவான் இரா. இராகவ ஐயங்கார் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.