பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



I திருக்கோயில்கள்

சேதுபதி மன்னர்களது சீமையில் அமைந்துள்ள சைவ, வைணவ திருத்தலங்கள் மிகவும் புனிதமாக நூற்றாண்டு பலவாகப் போற்றப்பட்டு வருகின்றன. பாண்டிய நாட்டின் தேவாரப் பதிகம் பெற்ற 16 திருக்கோயில்களில் சேதுபதிச் சீமையில் இராமேஸ்வரம், திருவாடானை, காளையார் கோவில், திருப்புத்துார், திருக்கொடுங்குன்றம், திருச்சுழியல் என்ற 6 திருத்தலங்களும் வைணவ ஆச்சார்யர்களால் 108 திவ்ய ஸ்தலங்கள் எனப் போற்றப் படுபவைகளில் திருப்புல்லாணியும். திருக்கோட்டியூரும் இங்கு அமைந்துள்ளன. இவையல்லாது பக்தர்ரெல்லாம் பார் மேல் சிவபுரம் என்று ஏத்தப் பெறுகின்ற திரு உத்திரகோசமங்கையும் வைணவர்களால் குறிப்பாக மணவாள மாமுனிவரால் திருப்பணி செய்யப்பெற்ற கொத்தங்குளம் என்பன போன்ற வேறு சில கோயில்களும் சேது நாட்டின் அணிகலன்களாக திகழ்ந்துவருகின்றன.

இந்தத் திருக்கோயில்களுக்குச் சேது மன்னர்களால் அறக்கொடையாக வழங்கப்பட்ட சர்வமான்ய ஊர்களில் இருந்து ஆண்டு தோறும் சேதுபதி மன்னருக்கு வருகின்ற வருவாய்களான நஞ்சைத் தீர்வை, புஞ்சைத் தீர்வை, பழவரி, தறிக்கடமை, கத்திப் பெட்டி வரி, கீதாரி வரி, சாணார் வரி முதலியன அனைத்தும் அந்தந்தத் திருக்கோயில்களுக்குக் கிடைக்கத்தக்க வகையில் சேதுபதி மன்னர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இவைகளைக் கொண்டு கோயில் நிர்வாகிகள் கோயில்களின் அன்றாட வழிபாடுகள், கட்டளைகள், ஆண்டுத் திருவிழாக்கள் மற்றும் சிறப்புக் கட்டளைகள் ஆகியவற்றை நிறைவேற்றி வந்தனர். இராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித் திங்களில் ஆவணி மூலத் திருவிழாவும் மாசித் திங்களில் வசந்த விழாவும் நடைபெற்று வந்தன. திருப்புல்லாணி, திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் வசந்த விழாவும் திருமருதூர் நயினார் கோயிலில் வைகாசித் திருவிழாவும் பழனி வேலாயுத சாமி கோயிலில் தைபூசத் திருவிழாவும் மற்றும் பிற கோயில்களில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு மாதங்களில் பல விழாக்களும் நடைபெற்றுவந்தன. மேலும் திருப்புல்லாணித் திருக்கோயில் பெருமாளும் தாயாரும் விழாவின் போது எழுந்தருளி பவனி வருவதற்கு ஏற்ற பெரிய தேர் ஒன்றை அந்தத் திருக்கோயிலுக்கு வழங்கி முதலாவது தேரோட்டத்தையும் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் தொடக்கி வைத்தார்.சே. - 8