பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

139

வருகின்றது. மேலும் சேது யாத்திரையாக இராமேஸ்வரம் வருகின்ற பயணிகளுக்குச் சேதுபதி மன்னர்கள் நாள் தோறும் அன்னம் படைத்ததைப் பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இராமேஸ்வரம் திருக்கோயில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தராலும் திருநாவுக்கரசு சுவாமிகளாலும் பதிகங்கள் பாடப்பெற்றுப் போற்றப்பட்டு வந்ததை இலக்கிய வரலாறு தெரிவிக்கின்றது. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின் படி விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள மாநிலங்களில் இருந்து பயணிகள் சேதுயாத்திரையை மேற்கொண்டு வந்து சென்றனர் என்பது தெரிய வருகின்றது. அப்பொழுது வடக்கே இருந்து தெற்கேயும் மேற்கே இருந்து கிழக்கேயும், தெற்கே இருந்து வடகிழக்கேயுமாக மூன்று பாதைகள் இராமேஸ்வரத்திற்கு இருந்தன. போக்குவரத்து வசதியும் மக்கள் நடமாட்டமும் இல்லாத இந்தப் பாதைகளின் வழியே தலையில் ஒரு சிறிய துணி முடிச்சைச் சுமந்தவாறு கால் நடையாகவே வருகின்ற நூற்றுக் கணக்கான பயணிகளுக்குச் சேதுபதி மன்னர்கள் அந்த வழித்தடங்களில் அன்ன சத்திரங்கள் அமைத்துப் பயணிகளது களைப்பையும் பசிப் பிணியையும் நீக்கி உதவி வந்தனர். வடக்கே சோழ மண்டலத்தில் இருந்து கிழக்குக் கடற்கரையோரமாக இராமேஸ்வரம் வழித் தடத்திலும் நெல்லைச் சீமையின் வட பகுதியான வேம்பாறிலிருந்து சாயல் குடி, உத்திர கோசமங்கை. திருப்புல்லாணி வழியாகக் கிழக்கே செல்லுகின்ற வழித் தடத்திலும் அன்ன சத்திரங்கள் அமைத்து உதவிய பல மண்டபங்கள் இடிபாடுகளுடன் பரிதாபமாக இன்றும் காட்சியளிப்பவனாக இருக்கின்றன.

கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை இந்த வழித் தடங்களில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு பயணிக்கும் அன்ன சத்திரங்கள் நாள் தோறும் இருவேளை சோறு வழங்குவதற்காகச் சேதுபதி மன்னர்கள் பல ஊர்களை இறையிலியாக வழங்கியிருந்தனர். இவைகளைக் குறிக்கும் செப்பேடுகளிலிருந்து திரட்டப் பெற்ற செய்திகளின் படி 39 சத்திரங்களுக்கு எழுபத்தி ஏழு (77) ஊர்களைச் சேதுபதி மன்னர்கள் சர்வமானியமாக வழங்கியிருந்தது இப்பொழுது தெரிய வருகிறது. அவைகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.