பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

சேதுபதி மன்னர் வரலாறு

கொற்கையிலும் அடுத்து மதுரை, பெளத்திர மாணிக்கப் பட்டினத்திலும் தங்கியிருந்து இஸ்லாமியச் சமயப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இதன் காரணமாகச் சேதுநாட்டின் துறைமுக நகரங்களான கீழக்கரை, பெரிய பட்டினம், தேவிபட்டினம், தொண்டிப்பட்டினம், சுந்தர பாண்டியன் பட்டினம் ஆகிய ஊர்களில் இஸ்லாமியரது குடியேற்றங்கள் ஏற்பட்டன. இவர்கள் பெரும்பாலும் அரபு நாட்டில் இருந்து பாண்டிய நாட்டிற்குக் குதிரைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் வணிகத்திலும், பின்னர் அரசு சேவையிலும் அமர்த்தப்பட்டுப் பணியாற்றி வந்தனர்.

நாளடைவில் இங்கு தங்கி வாழ்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் எதிர்க்கரையில் உள்ள இலங்கை நாட்டிலும் வடக்கே கரையோர நாடுகளான ஆந்திரம், வங்காளம் ஆகிய மாநிலங்களில் கடல் வாணிகத்தில் ஈடுபட்டனர். கி.பி.1502ல் தூத்துக்குடிக்கு வந்த போர்ச்சுகல் நாட்டுப் பரங்கியரால் இவர்களது உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் சீர் குலைந்தன. இதனால் இவர்களது வாணிகத் தொடர்புகள் நமது நாட்டின் மேற்குக் கரையான கேரளத்துடன் வளர்ச்சி பெற்றன. கீழக்கரை, வேதாளை ஆகிய ஊர்களின் பள்ளி வாசல்களில், அடக்கவிடங்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் கொல்லம் ஆண்டு பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிய வருகிறது. திருமலை சேதுபதி மன்னர் ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களாக இருந்த முஸ்லீம்கள் கிழவன் சேதுபதியின் ஆட்சியில் பரவலாக மீண்டும் கடலோரக் கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது சேதுபதி மன்னருக்கும் கீழக்கரை வள்ளல் சீதக்காதிக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான உறவுகள் இதற்குப் பெரிதும் உதவின.

இதனால் சேதுநாட்டில் மேற்கு நாடுகளான துருக்கி, அரேபியா, பாரசீகம் ஆகிய நாடுகளில் இருந்து பல இஸ்லாமியத் துறவிகள் இங்கு வந்து தங்கி அமைதியாக மக்கள் நலப் பணியிலும் சமயப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். காலப்போக்கில் இவர்கள் இயற்கை எய்தி அடக்கம் பெற்ற புனித இடங்கள் மக்களால் பெரிதும் மரியாதையுடன் மதிக்கப் பெற்று வருகின்றன. இந்த இடங்களில் தூபதீபச் செலவுகளுக்கும் அன்னதானம் வழங்குவதற்காகவும் சமயப் பொறை மிகுந்த சேதுபதி மன்னர்கள் பல ஊர்களைத் தானமாக வழங்கியுள்ளனர். இப்பொழுது கிடைத்துள்ள ஆவணங்கள், செப்பேடுகள் வாயிலாகச் சேதுபதி மன்னர்கள் 10 புனித இடங்களுக்கு 13 ஊர்களை சர்வமானியமாக வழங்கி இருப்பது தெரிய வருகிறது.