பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இயல் - I
சேதுபதிமன்னர்களது
தொன்மையும் தோற்றமும்

பன்னெடுங்காலமாக வடக்கேயுள்ள வேங்கடமலைக்கும், தெற்கேயுள்ள குமரிமுனைக்கும் இடைப்பட்டதாகத் தமிழகம் அமைந்துள்ளது. இதனை 12ஆம் நூற்றாண்டு இலக்கண நன்னுல் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" என வரையறுத்துள்ளது. இந்த நூற்றாண்டின் மாபெரும் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும்,

“நீலத்திரைகடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு"

எனப் புகழ்ந்துள்ளார்.

இந்தப் பெரு நிலப்பரப்பைச் சங்ககாலந்தொட்டு முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் ஆட்சி செலுத்தி வந்தனர் என்பது வரலாறு. பாண்டிய மன்னர்களது கிழக்கு எல்லையான வங்கக் கடற்கரைப் பகுதி பிற்காலத்தில் மறவர் சீமை அல்லது சேதுநாடு என வழங்கப்பெற்றது. இதிகாசநாயகனான இராமபிரான் அமைத்த திருவணை எனப்படும் சேது. இந்தப் பகுதியின் கிழக்கே அமைந்து இருப்பதாலும், பல நூற்றாண்டு காலமாக மறவர் இன மக்கள் மிகுதியாக, இங்கு வாழ்ந்து வந்ததாலும், இந்தப் பகுதிக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டது.

மறவர் இன மக்களது ஏழு பிரிவினர்களில் இறுதிப்பிரிவினரான செம்பிநாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த நாட்டின் அதிபதிகளாக, சேதுபதிகள் என்ற சிறப்புப் பெயருடன் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த சேதுபதிகளைப் பற்றிய செய்திகள் குறிப்பாக இவர்கள் எந்த நூற்றாண்டிலிருந்து இந்தப் பகுதியின் ஆட்சியாளராக