பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

149

V. தமிழ்ப் புலவர்கள்

தமிழ்ப் புலவர் பெருமக்களை ஆதரித்துப் போற்றி வந்த தமிழ் மன்னர்களைப் பற்றி இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழ்ச் சமுதாயத்தின் வடவரின் ஆதிக்கம் மிகுந்து தமிழ் மொழியையும் தமிழ்ப் புலவர்களையும் புறக்கணித்து வந்த அவல நிலை கி.பி.15.16ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது பிற மொழி ஆதிக்கம், செல்வாக்குப் பெறுவதற்கு அந்நியரது ஆட்சி உதவி புரிந்தது. தமிழ்ப் புலவர் பெருமக்கள் வறுமையாலும் வாழ்க்கைச் சிறுமையாலும் நலிந்து நைந்து வாடும் நிலை ஏற்பட்டது. இதனை மாற்றித் தமிழ் மொழியின் செல்வாக்கினை உயர்த்துவதற்கு சேதுபதி மன்னர்கள் தான் துணை நின்றனர்

கி.பி 17 ம் நூற்றாண்டில் இராமநாதபுரம் திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சியில் மதுரை நாயக்கப் பேரரசுக்கு ஈடாக நிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்த மன்னர் தமிழ்ப் புலவர்களைத் தமது அரசவைக்கு வரவழைத்து அவர்களுக்குப் பொன்னும் பொருளும் ஈந்து பேற்றினர். தமிழ்ப் புலவர்களும் பல புதிய இலக்கியப் படைப்புகளை இயற்றி தமிழன்னைக்கு அணிவித்து மகிழ்ந்தனர். இதனால் இந்த மன்னரைப் புலவர் ஒருவர்.”...பஞ்சாகப் பறக்கயிலே தேவேந்திர தாருவொத்தாய் ஜெயதுங்கனே’[1] என்றும் ‘பால்வாய்ப் பசுந்தமிழ் வாசம் பறந்த வையைக் கால்வாய்த்த கறந்தையர் கோன்’ என்றும் போற்றிப் பாடினர். இந்த மன்னர், நாணிக்கண் புதைத்தல் என்ற துறையில் புதுமையாக ‘ஒரு துறைக் கோவை’ என்ற இலக்கியத்தைப் படைத்த அமிர்த கவிராயருக்குப் பதினாயிரம் பொன் கொடுத்து அவரது சொந்த ஊரான பொன்னன் கால் என்ற ஊரினையும் முற்றுட்டாக வழங்கி மகிழ்ந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. இன்னொரு புலவரான மல்லை அழகிய சிற்றம்பலக் கவிராயருக்குத் தள சிங்க மாலை என்ற இலக்கியத்தைப் பாடியதற்காக மிதிலைப்பட்டி என்ற ஊரினை வழங்கி அங்கிருந்து இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து செல்ல பல்லக்கு வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார். மற்றுமொரு புலவரான அனந்த


  1. பெருந்தொகை - பாடல் எண் 1285
    'மூவேந்தருமற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றெட்டுக் கோவேந்தருமற்று மற்றொரு வேந்தன் கொடையுமற்றுப் பாவேந்தர் காற்றிலிலவம்பஞ் சாகப் பறக்கையிலே தேவேந்தர தாருவொத் தாய்ரகுநாத செயதுங்கனே."