பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

சேதுபதி மன்னர் வரலாறு

கவிராயருக்கு மானுார் கலையூர் என்ற ஊரினை வழங்கி ஆதரித்ததும் தெரிய வருகிறது.

இந்த மன்னரது பின்னவரான கிழவன் ரெகுநாத சேதுபதி அழகிய சிற்றம்பலக் கவிராயரை ஆதரித்து மகிழ்ந்ததுடன் மருதூர் அந்தாதி பாடிய தலமலைகண்ட தேவரையும் போற்றி வந்தார் எனவும் தெரிகிறது. இந்த மன்னரையடுத்துச் சேதுபதிப் பட்டம் பெற்ற முத்து வயிரவநாத சேதுபதி மன்னர் சிறப்பாகக் கம்ப ராமாயணப் பிரசங்கம் செய்து மக்களை மகிழ்வித்து வந்த சர்க்கரைப் புலவருக்குக் கோடாகுடி, உளக்குடி என்ற இரு கிராமங்களை நிலக்கொடைகளாக வழங்கியதை அந்த மன்னரது செப்பேடுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னருக்குப் பிறகு சேது மன்னரான முத்து விஜய ரகுநாத சேதுபதி சக்கரைப் புலவரைப் போற்றிப் புரந்ததுடன் மதுரை சொக்கநாதப் புலவரையும் ஆதரித்துப் பாராட்டி வந்தார்.

இவ்விதம் சேதுபதி மன்னர்கள் கி.பி.19ம் நூற்றாண்டு வரை தமிழ்ப்புலவர்களை ஆதரித்து மகிழ்ந்ததையும் அதன் காரணமாகத் தமிழ் மொழிக்குப் பல புதிய படைப்புகள் கிடைக்குமாறு செய்தனர். தமிழ் மன்னர்கள் தமிழ்ப்புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து ஆதரித்ததையும் தம்மோடு அருகே அமரச்செய்து அமுதுாட்டியதையும் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம்.

ஆனால் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களைப் போல தமிழ்ப் புலவர்களுக்கு ஊரும் பேரும் கொடுத்து ஆதரித்ததற்கு ஒப்பான நிகழ்ச்சி எதுவும் இல்லை என்பதை வரலாறு மூலம் அறிய முடிகிறது. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்கள், செப்பேடுகளின்படி இந்த மன்னர்கள் 9 புலவர்களுக்கு 12 ஊர்களை இறையிலியாக வழங்கியதை மட்டும் அறியமுடிகிறது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சேதுநாட்டில் பிறந்து செந்தமிழுக்குப் புத்தம் புது அணிகலன்களான இலக்கியங்களைப் படைத்து இறவாப் புகழ் கொண்ட சேது நாட்டுப் புலவர்களது பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.