பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். எம். கமால்

15

இதனை உறுதிப்படுத்தும் மற்றொரு செய்தியும் உள்ளது இராமேஸ்வரம் தீவிற்கு எதிர்க் கரையில் உள்ள இலங்கை நாட்டின் யாழ்ப்பான நல்லூரில் முதன்முறையாகக் குமரவேளுக்குக் கோயில் அமைத்தபோது அங்கு ஆறுகால பூஜை முதலியன முறையாக நடப்பதற்குத் தகுதியான பிராமண சிரேஷ்டர்களை அனுப்பி வைக்குமாறு யாழ்ப்பாண மன்னர், ஆரியச் சக்கரவர்த்தி, சேதுபதி மன்னரைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது இருந்த சேதுபதி மன்னரும் ஆகம சாஸ்திரங்களில் வல்ல 10 பிராமணர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். இந்தச் செய்தியினை 15ஆவது நூற்றாண்டு இலக்கியமான முத்து ராஜக் கவிராயரது கைலாய மாலை தெரிவிக்கின்றது.

ஆனால், இவர்கள் கி.பி. 1607 - கி.பி. 1792 வரை வழங்கியுள்ள செப்பேடுகளின்படி இவர்களது பூர்வீக நகரமாக இன்றைய இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த விரையாத கண்டன் என்ற ஊர் குறிப்பிடப் படுவதிலிருந்து இவர்களது தொன்மை புலப்படுகிறது. மகாவித்துவான் ரா. ராகவய்யங்கார் எழுதிய செந்தமிழ் இதழ்க் கட்டுரையின்படி இவர்கள் சோழ மண்டலத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் தானைத் தலைவர்களாக இந்தப் பகுதிக்கு வந்தவர்கள் என்பது அறியப்படுகிறது. இதனை மேலும் தெளிவு படுத்தக்கூடிய ஆவணங்கள் இல்லையென்றாலும், இந்தச் சேதுபதி மன்னர்களது செப்பேடுகளில் தொடர்ந்து காணப்படும். "துகவூர் கூற்றத்து குலோத்துங்க சோழ நல்லூர்" என்ற ஊரை ஏற்படுத்தி அங்கேயே நிலைத்திருந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்று மூன்றாம் குலோத்துங்க சோழனைப் பற்றிய இலக்கியமான ”சங்கர சோழன் உலா” வில் 'தஞ்சைக்கும் கோழிக்கும் தாமப்புகாருக்கும் சேதுக்கும்' என்ற தொடரிலிருந்து 3 ஆம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் ஒரு பகுதியாக சேதுநாடும் இருந்தது என்று தெரிகிறது.

சோழ நாட்டிலிருந்து வந்த இந்த தானைத் தளபதிகள் முதலில் கானாடு என்று வழங்கப்பெறும் திருமெய்யம் பகுதியில் முதலில் நிலைத்து இருந்தனர். அப்பொழுது 12ஆம் நூற்றாண்டில் விஜயரகுநாத முத்துவயிரிய முத்துராமலிங்க சேதுபதி என்பவர் திருமெய்யம் கோட்டையைக் கட்டியதாக வரலாற்றுச் செய்திகள் உள்ளன. அவர்கள் அந்தப் பகுதியில் மிகுதியாக உள்ள மறவர் இன மக்களிடையே இரண்டு ஊர்களிலிருந்து சேதுபதி மன்னருக்குத் தங்களது பெண்மக்களை மணம் புரிந்துகொள்வதற்கு சிறை கொடுத்ததாகவும் அதற்காக அந்த இரண்டு ஊர் மக்களும் சம்பந்தப்பட்ட இரண்டு