பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். எம். கமால்

21

போர்த்துக்கீசியர்களும் நாயக்கமன்னருக்குக் கட்டுப்பட்ட குடிகளாக இருக்கவில்லை. ஏறத்தாழ 100 ஆண்டுகாலமாக மன்னார் வளைகுடாப் பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கீசியர் கி.பி. 1658இல் தங்களது ஆதிக்கத்தை டச்சுக்காரர்களிடம் இழந்து விட்டனர் என்றாலும் அவர்களது அதிகாரம் பாண்டியநாட்டின் கீழ்க்கடற்கரையில் தொடர்ந்து வந்தது. அதனையடுத்து நிறுத்தவோ எதிர்த்து அழிப்பதற்கோ மதுரை மன்னரிடம் போதுமான படைபலம் இல்லாத பரிதாபநிலை போர்த்துக்கீசிய பாதிரியார்களிடம் ஞானஸ்நானம் பெற்ற பரவர்கள் போர்ச்சுகல் நாட்டு மன்னர்களது குடிமக்களாக மாறினர். அந்த நாட்டுச் சட்ட திட்டங்களையும் பரவர்களது குடியிருப்புகளான மணப்பாடு, பெரியதாழை, வீரபாண்டியன் பட்டினம், வேம்பார் குடியிருப்புகளும் போர்ச்சுகல் நாட்டு வீரர்களது பாதுகாப்பிலும் இருந்து வந்தன.

இந்தப் பரிதாபநிலை கிழக்குக் கடற்கரை முழுவதும் நீடித்ததால் மதுரைப் பேரரசிற்கு மிகப்பெரிய சோதனையாகிவிடும் என்பதை உணர்ந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் நமது போர்த்துக்கீசிய எதிர்ப்பு அணிக்கு மறவர் சீமையின் மன்னர் பயன்படுவார் என்ற சிந்தனை அவருக்கு இருந்தது.

மற்றும் இந்தப் பணிகளுக்கு மிகவும் பொருத்தமான வீரர் சேதுபதி என்பதை இன்னொரு நிகழ்ச்சி மூலமும் மதுரை மன்னர் கண்டறிந் திருந்தார். பொதுவாக அப்பொழுது ஸ்ரீரங்கத்திற்கும் இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட பாதையில் பயணிகளுக்குக் கள்ளர்களினால் மிகுந்த இழப்பு ஏற்பட்டு வந்தது. மறவர் சீமையைப் பொறுத்த வரையில் இராமேஸ்வரம் பயணிகளுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாதவாறு சடைக்கத் தேவரது சிறப்பான நிர்வாகம் கண்காணித்து வந்தது. மதுரை மன்னரது இராஜகுரு இராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை சென்றபோது இதனை நேரில் உணர்ந்து தீர்த்த யாத்திரை முடிந்தவுடன் மன்னருக்குத் தெரிவித்திருந்தார். ஆதலால் சடைக்கத் தேவரது பேராற்றலில் மதுரை மன்னருக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது.

திருப்பத்தூர் சீமை பட்டமங்கலம் பகுதியில் மதுரை மன்னருக்கு எதிராகக் கிளம்பிய அக்கிரமக்காரர்களை அடக்கி ஒடுக்கியதுடன் அந்தப் பகுதியிலிருந்து மதுரை மன்னருக்குச் சேரவேண்டிய அரசு இறை, முறையாகக் கிடைப்பதற்குச் சேது மன்னர் தக்க ஏற்பாடு செய்தார் என்பது மதுரை நாயக்கர் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]


  1. Sathya Natha Ayar. A – History of Madura Nayaks (1928)