பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சேதுபதி மன்னர் வரலாறு

போர்க்கொடி உயர்த்தினர். குழப்பம், கலகம், சீரழிவு இந்தச் சூழ்நிலையை மேலும் தொடர விரும்பாத திருமலைநாயக்க மன்னர் இரண்டாவது சடைக்கன் சேதுபதியைச் சிறையினின்றும் விடுவித்துப் போகலூருக்குத் திருப்பி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வுகள் கி.பி. 1640ல் நிகழ்ந்தன.

அறக்கொடைகள்

அடுத்த 5 ஆண்டு காலங்களில் சடைக்கன் சேதுபதி பல தெய்வீகப் பணிகளை மேற்கொண்டிருந்தார் என்பதை சில வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. திருவாடானை வட்டத்திலுள்ள திருத்தேர் வளையில் எழுந்தருளியுள்ள ஆண்டு கொண்ட ஈசுவரர் கோயிலுக்குக் கொங்கமுட்டி, தச்சனேந்தல், தண்டாலக்குடி ஆகிய ஊர்களையும் புளியங்குடியில் உள்ள பூவணப்புநாத திருக்கோயிலுக்கு விரகடியேந்தல் என்ற ஊரினையும் சர்வமானியமாக வழங்கியதனை அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமது தந்தை சடைக்கன் சேதுபதியையும், சகோதரர் கூத்தன் சேதுபதியையும் பின்பற்றியவராக இராமேஸ்வரத் திருக்கோயிலின் நுழைவுவாயிலில் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பெற்ற இராஜ கோபுரத்தினை நிர்மாணிப்பதற்கு இந்த மன்னர் முயற்சி செய்தார். இந்தத் திருப்பணிக்காகச் சேதுநாட்டில் தெற்கு வட்டகையான சாயல்குடி பகுதியிலிருந்து கிடைக்கும் அனைத்து வருவாய்களையும் இந்த கட்டுமானத்தில் ஈடுபடுத்தி வந்தார்.[1] என்றாலும் இந்த மன்னரது வாழ்நாளில் இந்தத் திருப்பணி நிறைவு பெறாத நிலையில் கி.பி. 1645ல் இந்த மன்னர் காலமானார். ஆனால் இவரது ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் கோட்டைக்குள் தொடங்கப்பெற்ற சொக்கநாத ஆலயம் இவரது ஆட்சிகாலத்திலேயே நிறைவுபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


  1. Seshadri. Dr. Scthupathis of Ramnad. (unpublished Ph.D. thesis 1974)