பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இயல் - III
திருமலை ரெகுநாத சேதுபதி

தளவாய் இரண்டாவது சடைக்கன் சேதுபதி ஆண்வாரிசு இல்லாமல் இறந்து போனதால் சேதுநாட்டின் அரசுரிமை யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. சேதுபதிப் பட்டத்திற்கு மறைந்த மன்னரான தளவாய் சேதுபதியின் தங்கை மக்களான தனுக்காத்த தேவர், நாராயணத் தேவர், திருமலைத் தேவர் ஆகிய மூவர்களில் ஒருவரை சேது மன்னர் ஆக்குவதற்கு அரண்மனை முதியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித்தேவர் மதுரை மன்னர் திருமலை நாயக்க மன்னரை மீண்டும் அணுகி சேதுநாட்டிற்குத் தம்மை மன்னராக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே மறவர் சீமையைத் தமதாக்கிக் கொள்ள முயன்ற திருமலை நாயக்க மன்னர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள சேதுநாட்டு அரசியலில் தலையிட்டார். தம்பித் தேவரையும் அவரது எதிர்த் தரப்பினரான தனுக்காத்த தேவர் முதலியோரையும் கலந்து ஆலோசித்து அவரது முடிவினை அவர்களிடம் தெரிவித்தார். இதன்படி ஏற்கனவே காளையார் கோவில் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த தம்பித் தேவருக்கு அந்தப் பகுதியினை ஆளும் உரிமையினையும், தனுக்காத்த தேவருக்கு சேதுநாட்டின் வடகிழக்குப் பகுதியான அஞ்சுகோட்டை பகுதியையும், திருமலை ரெகுநாதத் தேவர் இராமநாதபுரம் கோட்டை உள்ளிட்ட தென் பகுதியையும் ஆள வேண்டும் என்பதுதான் திருமலை நாயக்கரது தீர்ப்பு ஆணைத் திட்டம். வலிமையுடனும், ஐக்கியத்துடனும் ஒன்றுபட்ட சேதுநாட்டை இந்த மூன்று பகுதிகளாகப் பிரிவினை செய்வதன் மூலம் திருமலை நாயக்க மன்னரது இரகசிய திட்டத்திற்கு ஏற்ப இந்தப் பிரிவினை அமைந்தது.

இராமேஸ்வரம் போரினால் பலத்த பொருளாதாரச் சிதைவும் பொதுமக்களுக்குப் பலவிதமான சிரமங்களும் ஏற்பட்டிருந்த நிலையில் மேலும் இரத்தக்களரியையும், குழப்பத்தையும் தவிர்க்கும் வகையில் திருமலை நாயக்க மன்னரது தீர்ப்பினை மூவரும் ஏற்றுக்கொண்டு முறையே காளையார் கோவிலிலும், அஞ்சுக்கோட்டையிலும்.