பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சேதுபதி மன்னர் வரலாறு

போகலூரிலும் தங்களது ஆட்சியினை அந்த மூவரும் தொடங்கினார்கள். ஆனால் திருமலை நாயக்க மன்னருக்கு ஏமாற்றம் தரும் வகையில் சேதுநாட்டில் அரசியல் நிகழ்ச்சிகள் அமைந்தன. காளையார் கோவிலில் தம்பித்தேவரும், அஞ்சுக்கோட்டையில் தனுக்காத்தத் தேவரும் அடுத்தடுத்து, காலமானார்கள். அவர்களுக்கு உரிய வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அந்த இரு பகுதிகளும் திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிப்பகுதியாக அமைந்து சேது நாட்டின் புகழினைப் பரப்பும் வாய்ப்பாக அமைந்தது.

இப்பொழுது மதுரை மன்னர் திருமலை நாயக்கருக்கு அடுத்தடுத்து பல சோதனைகள எழுந்தன. முதலாவதாக அந்த மன்னரது எழுபத்து இரண்டு பாளையக்காரர்களில் ஒருவரான எட்டையபுரத்துப் பாளையக்காரர் மதுரை மன்னருக்கு எதிராக திருநெல்வேலிச் சீமையில் சில பாளையக்காரர்களைத் திரட்டி திருமலை நாயக்கருக்கு எதிராகக் கலகக்கொடி உயர்த்தினார். மதுரை நாயக்க அரசினால் பாளையக்காரர் பதவியைப் பெற்ற எட்டயபுரம் பாளையக்காரர் உள்ளிட்ட தெற்கத்திய பாளையக்காரர்கள் இத்தகைய இக்கட்டான நிலையை உருவாக்கக் கூடும் என்பதைச் சிறிதும் எதிர்பாராத திருமலை நாயக்க மன்னர் செய்வது அறியாது திகைத்தார். முடிவில் ஒருவாறாகத் தேறுதல் பெற்றுச் சேதுபதி மன்னரை அணுகினார்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற பொதுமறைக்கு ஏற்ப மதுரை மன்னர் சேதுநாட்டிற்கு இழைத்த தீங்குகளை மறந்து சேதுபதி மன்னர் மதுரை மன்னருக்கு உதவச் சென்றார்.

மதுரை மீது கன்னடியர் படையெடுப்பு

எட்டயபுரம் பாளையக்காரரையும் அவரது கூட்டணியையும் முறியடித்து எட்டையபுரம் பாளையக்காரரைக் கைது செய்து மதுரையில் திருமலை நாயக்கர் அரசவையில் நிறுத்தினார்.

அடுத்து கி.பி. 1658ல் திருமலைநாயக்கர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் மைசூரிலிருந்து மாபெரும் கன்னடப் படையொன்று மதுரை நோக்கி வருவதாகச் செய்திகள் கிடைத்தன. மதுரையைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில் மூன்றாவது முறையாகக் கன்னடப்படைகள் மதுரை நோக்கி வந்தன. இந்த மோசமான நிலையில் மதுரைப் படைகளுக்குத் தலைமை வகித்துக் கன்னடியர்களை வெற்றி கொள்வது யார்? தமது பாளையக்காரர்களில் வலிமை மிக்க ஒருவரை