பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

33

வடுகரை இந்தப் போரினை நடத்துமாறு பணித்தால். போரில் அவர் வெற்றி பெற்றுத் திரும்பினால் தமக்கு எதிராக மதுரையை ஆள நினைத்தால்...? இந்த வினாக்களுக்கு விடை காண முடியாமல் தத்தளித்த மதுரை மன்னர் சேதுபதி மன்னரை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார். மதுரை மன்னரது பரிதாப நிலைக்கு இரக்கப்பட்ட திருமலை ரெகுநாத சேதுபதி 15,000 மறவர்களுடன் மதுரைக்கு விரைந்தார். மதுரைப் படைகளுக்குத் தலைமையேற்றுச் சென்று கன்னடப் படைகளை அம்மைய நாயக்கனுரை அடுத்த பரந்த வெளியில் கன்னடியரின் பிரம்மாண்டமான படை அணிகளைத்தாக்கி அழித்து வெற்றி கொண்டார்.[1] வெற்றிச் செய்தியினை அறிந்த மதுரை மன்னர் மதுரைக் கோட்டையில் திருமலை ரெகுநாத சேதுபதிக்கு மிகச் சிறந்த வரவேற்பினை வழங்கிப் பரிசுப் பொருள்களையும் அளித்துப் பாராட்டினார். மேலும் சேது நாட்டின் தென்மேற்கே உள்ள திருச்சுழியல், பள்ளி மடம், திருப்புவனம் ஆகிய மதுரை அரசின் பகுதிகளையும் அன்பளிப்பாக வழங்கிச் சிறப்பித்தார். மேலும் ஆண்டுதோறும் புரட்டாசித் திங்களில் மதுரை மாநகரில் திருமலைநாயக்க மன்னர் நடத்தி வந்த நவராத்திரி விழாவினைச் சேது நாட்டிலும் நடத்தி வருமாறு சொன்னதுடன் அந்த விழாவிற்கு மூலமாக அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மனின் பொன்னாலான சிலை ஒன்றினையும் சேதுபதி மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

சேதுநாட்டில் நவராத்திரி விழா

வெற்றி வீரராகத் திரும்பிய திருமலை சேதுபதி மன்னர் அந்த அம்மன் சிலையினை இராமநாதபுரம் கோட்டையில் அரண்மனை வளாகத்தில் பிரதிஷ்டை செய்து அந்த ஆண்டு முதல் நவராத்திரி விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.[2] இத்தகைய வெற்றிகளினால் புதிய சிந்தனையும், புது வலிமையும் பெற்ற ரெகுநாத சேதுபதிமன்னர் பல அரிய செயல்களைச் செய்வதற்கு முனைந்தார்.

சேதுநாட்டின் எல்லைப் பெருக்கம்

முதலாவதாகச் சேதுபதி மன்னர் உள்ளிட்ட செம்பிநாட்டு மறவர்களது பூர்வீகப் பகுதியான சோழ மண்டலத்தின் வடக்கு. வடகிழக்குப் பகுதியினையும் சேதுநாட்டின் பகுதியாக்கத் திட்டமிட்டார். அதனையடுத்துச் சேதுநாட்டின் வடபகுதி கிழக்குக் கடற்கரை வழியாக அறந்தாங்கி, பட்டுக்கோட்டைச் சீமைகளைக் கடந்து திருவாரூர்ச் சீமை,


  1. Sathya Natha Ayyar - History of Madura Nayaks (1928)
  2. கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994). சே. - 3