பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

37

முதன்முறையாக நிறுவினார். சாலை வசதிகளும், போக்குவரத்து சாதனங்களும் இல்லாத அந்தக் காலத்தில் வடக்கே வெகு தொலைவிலிருந்து இராமேஸ்வரம் யாத்திரையாக ஆண்டுதோறும் பல பயணிகள் கால்நடையாகவே இராமேஸ்வரத்திற்கு நடந்து வந்தனர். வடக்கே சோழ நாட்டிலிருந்தும், தெற்கே நாஞ்சில் நாட்டிலிருந்தும், மேற்கே மதுரைச் சீமையில் இருந்துமாக மூன்று பாதைகள் இராமேஸ்வரத்திற்கு வரும் வழியாக அமைந்திருந்தன. இப்பாதைகள் 'சேது மார்க்கம்' என அழைக்கப்பட்டன. இந்தப் பாதைகளில் எட்டு அல்லது 10 கல் தொலைவு இடைவெளியில் ஒரு சத்திரம் வீதம்பல சத்திரங்களை அமைத்து அங்கே ஒவ்வொரு பயணியும் மூன்று நாட்கள் தங்கி, இளைப்பாறி இலவசமாக உணவு பெறுவதற்கும் சிறந்த ஏற்பாடுகளை இந்த மன்னர் செய்தார். இந்த அன்ன சத்திரப் பணிகள் தொய்வு இல்லாமல் தொடருவதற்குச் சேதுநாட்டில் பல ஊர்களை இந்தச் சத்திரங்களுக்குச் சர்வமானியமாக வழங்கி உதவினார். இந்த மன்னரை அடுத்துச் சேதுபதிகளாக முடிசூட்டிக் கொண்டவர்களும் இந்தப் பணியினைத் தொடர்வதற்குத் திருமலை சேதுபதி மன்னரது இந்த ஆக்கப் பணிகள் முன்னோடி முயற்சியாக அமைந்தன என்றால் அது மிகை ஆகாது.

திருமடங்கள் போற்றுதல்:

இந்த மன்னரது ஆட்சியில் சிறப்புக்களைக் காலமெல்லாம் எடுத்துச் சொல்லும் இந்த ஆன்மீகப் பணிகளான திருக்கோயில், அன்னசத்திரம், சிறுபான்மையினரது வழிபாட்டுத் தலங்கள், என்ற துறைகளில் மட்டும் அமைந்து விடாமல் இன்னும் மிகச் சிறந்த இருபணிகளை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. முதலாவது திருமடங்களைப் பாதுகாத்து வளர்த்தது. இரண்டாவது, கற்கண்டிலும் இனிய கன்னித்தமிழை மிகவும் இடர்ப்பாடான காலகட்டத்தில் போற்றி வளர்ததும் ஆகும். திருமடம் என்று சொல்லும்போது நமது மனக்கண்ணில் தோன்றுவது சோழ வளநாட்டில் உள்ள திருவாவடுதுறை திருமடம் ஆகும். தமிழகத்தில் பல வேற்று மதங்களும், ஆற்றிய ஆக்கிரமிப்புகளும் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு முதல் ஏற்பட்டு வந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் 'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' எனத் திருவாசகம் தெரிவிக்கின்ற சைவ சித்தாந்தத்தையும், நடைமுறைகளையும் பாதுகாத்து மக்களை நன்னெறிப்படுத்தும் பணியில் தொடங்கப்பெற்றது திருவாவடுதுறை திருமடம் ஆகும். இந்த மடத்தின் தோற்றம் பற்றிய சரியான காலவரையறை அறியத்தக்கதாக இல்லை. ஆனால் பதினென் சித்தர்களில் மூத்தவரான திருமூலர் என்பவர் இந்தத் திருமடத்தின் தலையாய மூலவர் எனத் தெரிகிறது. திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் அந்த