பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சேதுபதி மன்னர் வரலாறு

மடத்தின் தலைவர் ஒருவர் இராமேஸ்வரத்தில் இந்த சேதுமன்னரைச் சந்தித்த போது மன்னர் அவரது மடத்தையும் அவரது ஆட்சியில் அமைந்திருந்த திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோவிலின் சிறப்பையும் பற்றி அறிந்துகொண்டார். பின்னர் ஆதீனமும், திருப்பெருந் துறை திருக்கோயிலும் மன்னரது பல அறக்கொடைகளுக்கு இலக்கு ஆகின. மேலும் திருவாவடுதுறை ஆதீனம் சேதுநாட்டில் தங்களது சமயப் பணிகளைத் தொடங்கி நடத்துவதற்காக இராமநாதபுரம் அரண்மனையின் மேல வீதியில் திருமடம் ஒன்றும், திருவாவடுதுறையினருக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக தமிழர் பிரான் எனப் பிற்காலத்தில் சேது மன்னர்கள் போற்றப்படுவதற்கு முன்னோடியாக அமைந்தவரும் இந்த சேதுபதி மன்னர்தான். தமிழகம் வடவர்களாலும், வடுகர்களாலும் கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களது ஆட்சிக்களமாக கி.பி. 17ஆம் நூற்றாண்டு இறுதிவரை இருந்து வந்தது. வடுகர்களது தாய்மொழி தெலுங்கு மொழியாக இருந்ததாலும் அந்த மொழி பிராமணர்களது சமஸ்கிருத மொழியுடன் தொடர்புடையதாக இருந்ததாலும் மதுரை, தஞ்சை செஞ்சி, வேலூர் ஆகிய ஊர்களைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாயக்க மன்னர்கள் தெலுங்கையும, சமஸ்கிருத மொழி ஆகிய இரு மொழிகளை மட்டுமே ஆதரித்து அந்த மொழிகளில் வல்ல புலவர்களுக்கு அன்பளிப்புக்களும், பாராட்டுக்களும் அளித்து வந்தனர். தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்த தமிழ்ப் புலவர்கள் தக்க ஆதரவு இல்லாத காரணத்தினால் வாழ்க்கையில் நலிந்து நொந்து வறுமையின் பிடியில் வாடி வந்தனர்.

இந்த இழி நிலையை அறிந்து மனம் வெதும்பிய சேதுபதி மன்னர் தமிழுக்கும். தமிழ்ப்புலவர்களுக்கும் தேவ தாருவாக (கற்பகத் தாருவாக) விளங்கினார். அப்பொழுது இந்த மன்னரது வீரச் செயல்களையும். கொடைச் சிறப்பையும் செம் பொருளாகக் கொண்டு 100 பாடல்களைக் கொண்ட 'ஒரு துறைக் கோவை' என்ற நூலினைப் பாடிய அமுதகவிராயரைத் தமது அரசவைக்கு வரவழைத்துப் பொன்னும், பொருளும் வழங்கியதுடன் அவரது சொந்த ஊரான சிவகங்கை வட்டாரத்திலுள்ள பொன்னன் கால் என்ற கிராமத்தினையும் அந்தப் புலவருக்குத் தானமாக வழங்கினார்.[1] மேலும் தொண்டை மண்டலத்திலிருந்து சேது நாட்டிற்கு வந்த அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்ற புலவரையும் ஆதரித்துப் போற்றினார். திருமலை மன்னர் மீது தளசிங்கமாலை என்ற இலக்கியத்தைப் பாடியதற்காக மிதிலைப்பட்டி என்ற கிராமத்தை அந்தப் புலவருக்கு மன்னர் தானமாக வழங்கி உதவினார்.[2] அன்று முதல் அழகிய


  1. Inam Fair Register - available at the Ramnad Collector's Office
  2. Inam Fair Register-available at the Ramnad Collector's Office.