பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சேதுபதி மன்னர் வரலாறு

தஞ்சைப் பேரரசின் இராஜ இராஜ சோழனது அன்புக் கிழத்தியான உலக மகா தேவியைப் போன்று இராணியார் சில அறக் கொடைகளை வழங்கியிருப்பதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இராமேஸ்வரம் திருக்கோயிலில் கோயில் உள்துறைக் கட்டளைக்கு திரு உத்திரகோச மங்கையை அடுத்த மேலச் சீத்தை என்ற கிராமத்தை கி.பி. 1693ல் இந்த இராணியார் வழங்கியதைச் செப்பேட்டு வாசகம் ஒன்று தெரிவிக்கின்றது. அடுத்து கி.பி. 1709ல் தனுஷ்கோடியில் அந்தணர்களது அக்கிரஹாரம் அமைவதற்கு தேவகோட்டைப் பகுதி களத்தூர் எனற கிராமத்தை இவர் தானம் வழங்கியது இன்னொரு செப்பேட்டின் மூலம் தெரியவருகிறது. இவைகளைப் போன்றே சேதுப் பயணிகளது பயன்பாட்டிற்கென எம்மண்டலமுங் கொண்டான் என்ற கிராமத்தினைத் தானமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த அன்ன சத்திரம் இன்றும் இராமநாதபுரம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி என்ற இடத்தில் செயலற்று இருந்து வருகிறது. அந்தக் கிராமம் இன்று என்மனம் கொண்டான் என்ற பெயரில் வழக்கில் உள்ளது.

திருமெய்யம் பாளையக்காரன் சிவந்து எழுந்த பல்லவராயர் என்பவர், சேது நாட்டின் வடக்கில் அமைந்திருந்த காவல் அரணாகிய திருமெய்யம் கோட்டையின் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழ்நிலையில் சிவந்து எழுந்த பல்லவராயர் தஞ்சை மராட்டியருடன் இரகசியமான தொடர்புகளைக் கொண்டு இருந்தார். இதனையறிந்த சேது மன்னர் விசாரணைக்காக அவரைத் தமது அரசவைக்கு அழைத்த பொழுது அவர் மறுத்ததால் அவரைக் கொன்று ஒழித்துவிட்டு அவரது பணிக்கு ரகுநாத ராய தொண்டைமான் என்ற கள்ளர் சீமைத் தலைவரை நியமனம் செய்தார். இவரது உடன் பிறந்தவரான காதலி நாச்சியார் என்பவரைச் சேது மன்னர் ஏற்கனவே தமது மனைவியாகக் கொண்டிருந்தார். இதனால் மன்னரது நம்பிக்கைக்கு உரியவராக இரகுநாத தொண்டைமான் கருதப்பட்டார்.

என்றாலும் மன்னரது மைத்துனர் என்ற உறவையும் மீறித் திருமெய்யம் உள்ளிட்ட புதிய புதுக்கோட்டை தன்னரசினை இவர் ஏற்படுத்தினார்.[1] இதனால் மன்னர் மிகுந்த சீற்றம் அடைந்த பொழுதிலும் தொண்டைமானைத் தண்டிக்க முற்படவில்லை. மனைவி காதலி நாச்சியாரின் வேண்டுதல் ஒருபுறமும், தெற்குச் சீமையில் எழுந்த கலவரங்களும் மன்னரை மற்றொரு புறமுமாகத் தடுத்துவிட்டன


  1. Sathya Natha Ayyar - History of Madurai Nayaks (1928)