பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சேதுபதி மன்னர் வரலாறு

வெளிப்படும் வெள்ளப் பெருக்கினால் வேளாண்மை நடைபெறுகின்ற நிலப்பரப்பு முழுமையையும் இந்த மன்னர் கி.பி. 1697ல் தானமாக வழங்கினார். இதன் காரணமாக இந்த மடை பின்னர் இராமனாத மடை எனப் பெயர் பெற்றது. மேலும் இந்தக் கோயிலில் நடைபெறும் ‘'தேவர் கட்டளை” என்ற ‘'உச்சி கால கட்டளை'’ முதலிய நிகழ்ச்சிகளைச் சரிவர நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக இந்த மன்னர் இராமேஸ்வரம் சங்கர குருக்கள் மகன் ரகுநாத குருக்களைத் தமது சொந்தப் பிரதிநிதியாக நியமித்து அவருக்குத் திருக்கோயிலில் வழங்கப்பட வேண்டிய மரியாதைகள் முதலியனவற்றை நிர்ணயம் செய்ததை இந்த மன்னரது இன்னொரு செப்பேட்டுச் செய்தி மூலம் தெரியவருகிறது. இந்தக் கோவிலின் நடைமுறைகளைக் கவனிப்பதற்கு என ஆதீனகர்த்தர் ஒருவர் இருந்து வந்தபொழுதிலும் ரெகுநாத குருக்கள் புதிதாக ஏன் நியமனம் செய்யப்பட்டார் என்ற வினா இங்கு எழுகிறது. இந்தத் திருக்கோயிலின் உச்சிக்காலக் கட்டளையை இந்த மன்னரது முன்னோரான முதலாவது சடைக்கத்தேவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆதலால் சேதுபதி மன்னர் இந்தக் கட்டளையை மிகப் புனிதமான செயலாகக் கருதி அதனைச் செம்மையாக நாள்தோறும் தவறாமல் நிறைவேற்றுவதைக் கண்காணிப்பதற்கு ரெகுநாத குருக்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. மற்றும் இந்தத் திருக்கோயிலுக்கு வருகைதருகின்ற பயணிகளுக்கு இராமேஸ்வரத்தில் அன்னசத்திரம் ஒன்றினை நிறுவி அதன் பராமரிப்புக்கு உதவுவதற்காக முதுகளத்துர் வட்டத்தில் உள்ள நல்லுக்குறிச்சி என்ற ஊரினைச் சர்வமானியமாக வழங்கியதை கி.பி.1691ஆம் ஆண்டு செப்பேடு தெரிவிக்கின்றது. அந்தச் சத்திரம் இன்றும் இராமேஸ்வரம் மேலரத வீதியில் நடத்தப்பட்டு வருகிறது.

தமது முன்னவரான திருமலை ரகுநாத சேதுபதி மன்னரைப் போன்று வைணவ திருத்தலமான திருப்புல்லாணித் திருக்கோயிலின் பூஜை திருவிளக்கு. நந்தவனம், ஆடித்திருவிழா போன்ற திருப்பணிகளுக்காக இராமநாதபுரம், முதுகளத்துர், பரமக்குடி வட்டாரங்களில் உள்ள இருபத்தி ஏழு கிராமங்களை இந்த மன்னர் அந்தக் கோயிலுக்குத் தானமாக வழங்கியிருப்பது வியப்பிற்குரிய செய்தியாக உள்ளது.[1] அதுவரை சேதுபதி மன்னர் எவரும் ஒரு கோவிலுக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான கிராமங்களைத் தானம் வழங்கியது வரலாற்றில் காணப்படவில்லை. இன்னொரு வைணவத் திருத்தலமான திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள செளமிய நாராயணப் பெருமாளுக்கும் சில அறக்கொடைகளை வழங்கி உதவினார். அந்தக் கோயிலில்


  1. Dr.S.M. கமால் - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)