பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சேதுபதி மன்னர் வரலாறு

4. இராமநாதபுரத்தை அடுத்த மிகச்சிறந்த சைவத் திருத்தலமாகிய திரு உத்தரகோசமங்கை திருக்கோயிலுக்கு திருஉத்தரகோசமங்கை கிராமத்தையும், அதனை அடுத்துள்ள கிராமங்களையும் கி.பி. 1678ல் தானமாக வழங்கியுள்ளார்.

5. சேதுநாட்டின் சிறந்த பழம்பெரும் துறைமுகமான கீழக்கரையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்கு ஏற்கனவே திருமலை சேதுபதி மன்னர் புல்லந்தை முதலிய கிராமங்களை வழங்கியதை முன்னர் பார்த்தோம்.

இந்தக் கோயிலில் பணியாற்றிய இராமலிங்க குருக்களுக்குத் தகுந்த வருவாய் இல்லாததை உணர்ந்த ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் அந்த ஊரின் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்ற பொருள்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மகமையாகக் குருக்கள் பெற்றுக் கொள்வதற்கான உரிமை வழங்கியதை கி.பி. 1678 அவரது செப்பேடு தெரிவிக்கின்றது.

இத்தகைய தெய்வீகத் திருப்பணிகளில் முனைந்திருந்த சேதுமன்னர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தக்க துணையாக வாழ்ந்து வந்தார். மிதிலைப்பட்டி, அழகிய சிற்றம்பலக் கவிராயரை ஆதரித்துச் சிறப்பித்தார். திருமருதூர் என்னும் நயினார் கோவிலில் எழுந்தருளியுள்ள நாகநாத சுவாமி செளந்தரவள்ளி அம்மன் ஆகியோர் மீது அந்தாதி இலக்கியம் ஒன்றை இயற்றிய கார் அடர்ந்த குடி தலமலைகண்ட தேவர் என்ற புலவரைப் பாராட்டிப் பல சிறப்புக்களைச் செய்தார். இன்னும் பல புலவர்கள் இந்த மன்னரால் பொன்னும், பொருளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அறியத்தக்கனவாக இல்லை.

இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் சேதுநாட்டைச் சூழ்ந்திருந்த மதுரை நாயக்க அரசு தஞ்சாவூர் மராட்டிய அரசு ஆகியவைகளுடன் நட்பும், நல்லிணக்கமும் கொண்டு நல்ல அரசியல் உறவுகளை வளர்த்து வந்தார். ஆனால் நாயக்க மன்னரும், மராட்டிய மன்னரும் சேதுபதி மன்னருடன் நேர்மையான அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்க வில்லை என்பதை வரலாறு தெரிவிக்கின்றது.

கி.பி. 1680ல் திருச்சியிலிருந்த மதுரைச் சொக்கநாத நாயக்கரை, அவர் கோட்டையைவிட்டு உலவுவதற்காக வெளியே சென்றபோது, கோட்டைத் தளபதியான ருஸ்தம்கான் என்பவன் அவரைக் கைது செய்து சிறையிலிட்டான். அடுத்து அவரது உடன்பிறப்பான அலகாத்திரி