பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சேதுபதி மன்னர் வரலாறு

இதனைப் போன்றே தஞ்சை மராட்டிய மன்னரும் சேதுபதி மன்னரிடம் நண்பராக நடித்து வந்தவர். கி.பி. 1709 ஆகஸ்டு மாதம் திடீரென ஏற்பட்ட புயல்மழை வெள்ளத்தினால் சேதுநாட்டுக் குடிமக்கள் சொல்லொனாத துன்பங்களினால் அல்லல் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சேதுநாட்டின் வடபகுதி வழியாகச் சேதுநாட்டை ஆக்கிரமிக்கப் பெரும் படை ஒன்றை அனுப்பினார் தஞ்சை மன்னர். அந்தப் படையெடுப்பையும் சேதுபதி மன்னர் நசுக்கி அழித்தார். இவ்விதம் எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய சேதுபதி மன்னருக்கு உறுதுணையாக இருந்தது வள்ளல் சீதக்காதி மரைக்காயர் ஆவார். ஒருபுறம் தெய்வீகப் பணிகளும், இன்னொரு புறம் தமிழ் வளர்ச்சிப் பணிகளையும் தொடர்ந்த சேதுபதி மன்னர் தமது நாட்டில் வேளாண்மையும், வணிகமும் செழித்து வளருவதற்கு ஆவன செய்த காரணத்தினால் மக்களது பொருளாதார வசதியைக் கொண்டு எதிரிகளை எளிதாகச் சமாளித்து வெற்றிபெற முடிந்தது.

வள்ளல் சீதக்காதியின் தோழமை

மன்னரது சாதனைகளுக்கு மூலபலமாக விளங்கியவர் மன்னரது நண்பரும் வணிக வேந்தருமான கீழக்கரை சீதக்காதி மரைக்காயரே ஆவார். வள்ளுவரது வாக்கின்படி சீதக்காதி மரைக்காயரை நட்பு பாராட்டித் தமது உடன்பிறப்பிலும் மேலாக மன்னர் மதித்து நடந்து வந்தார். கீழ்த்திசை நாடுகள் பலவற்றுக்கும் வணிகம் நிமித்தமாகச் சென்றுவந்த சீதக்காதி மரைக்காயரது அனுபவ முதிர்ச்சியும் நிர்வாகத் திறனும் சேதுபதி மன்னரது சிறந்த ஆட்சிக்குப் பயன்பட்டன என்றால் அது மிகையாகாது.

முதலாவது சடைக்கன் சேதுபதி முதல் சேதுநாட்டின் தலைநகராகப் போகலூர் என்ற கிராமம் இருந்து வந்ததை மாற்றி இராமநாதபுரம் கோட்டையைச் சேது மன்னர்களது தலைநகராக விளங்கும்படி செய்தது சீதக்காதி மரைக்காயர் தான். மேலும் அதுவரை மண்கோட்டையாக இருந்து வந்த இராமநாதபுரம் கோட்டையை மிகச்சிறந்த கற்கோட்டையாக மாற்றியதும், மன்னருக்கு எனக் கோட்டைக்குள் கொலு மண்டபம் ஒன்றையும் அமைத்து அரண்மனை நிர்வாக நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தவரும் சீதக்காதி மரைக்காயரே ஆவார். மேலும் இவரது வணிகக்கப்பல்கள் கீழ்த்திசை நாடுகளான இலங்கை, வங்கம், கடாரம், மலாக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்று பலவகையான வணிகப் பொருள்களைச் சேதுபதிச் சீமைக்குக் கொண்டு வந்து சேர்த்ததுடன் பாண்டியநாட்டுப் முத்துக்கல், சோழநாட்டு தானியங்கள். கைத்தறி ஆடைகள், கேரளத்து மிளகு, இலங்கை நாட்டுக்