பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

53

இராமேஸ்வரம் திருக்கோவிலின் உபயோகத்திற்காக மன்னார் வளைகுடாவில் முத்துச்சிலாபக் காலங்களில் இரண்டு தோணிகள் வைத்து முத்துக்குளிக்கும் உரிமையையும் ஒரு செப்பேட்டின் மூலம் இராமேஸ்வரம் கோவிலுக்குத் தானம் வழங்கியுள்ளார்.

இவை தவிர இராமநாதபுரம் ஆதிமுத்துராமலிங்க சுவாமி திருக்கோவில் இந்த மன்னரால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மணிவாசகப் பெருமானால் திருப்பணி செய்யப்பட்டு திருவாசகப் பாடல்கள் பெற்ற திருப்பெருந்துறை ஆள்உடைய பரம சுவாமி ஆலயத்திற்கும் அந்தக் கோவிலினை நிர்வகித்து வருகின்ற திருவாவடுதுறை ஆதினத்திற்குமாகப் பல ஊர்களைக் குத்தகை நாட்டு அறந்தாங்கி வட்டத்தில் அறக்கொடைகளாக வழங்கியுள்ளார். தஞ்சை மண்டலத்தில் உள்ள திருமறைக்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஒரு மண்டபத்தினையும் அமைத்துக் கொடுத்துள்ளார் இன்றும் அந்த மண்டபம் சேதுபதி மண்டபம் என்றே வழங்கப்பட்டு வருகிறது. மற்றும் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் ஆலயத்திற்கு நம்பியூர் மாகாணத்து அன்னவாசல் என்ற ஊரினைத் தானமாக வழங்கியிருப்பதைத் திருவாரூர் கோயில் செப்பேடு ஒன்று தெரிவிக்கின்றது. இராமநாதபுரம் கோட்டைக்குள் உள்ளே அமைந்து உள்ள கோதண்டராமசுவாமி ஆலயத்திற்குக் காாாம்பல் என்ற கிராமத்தைத் தானமாக வழங்கியது இந்த மன்னரது சமரச மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அத்துடன் அந்தக் கோவிலின் பராமரிப்புச் செலவிற்காகச் சேதுநாட்டுப் பெருங்குடி மக்கள் ஆண்டுதோறும் எவ்வளவு கலம் நெல் இந்தக் கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ததுடன் இடையர்குடியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் எவ்வளவு படி நெய்கொடுக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ததை ஒரு செப்பேட்டின் வழி அறிய முடிகிறது.

இந்த மன்னரது இறை பக்தியையும் அறஉணர்வையும் வெளிப்படுத்தக்கூடிய நிகழ்ச்சி ஒன்று வரலாற்றில் பதிவு பெற்றுள்ளது. இராமேஸ்வரத்திற்குச் சேதுபாதை வழியாக கால்நடையாக மண்டபம் தோணித் துறைச் சத்திரத்திற்கு வந்துசேரும் பயணிகள் கடலைக் கடந்து இராமேஸ்வரம் சென்று தங்களது பயணத்தை முடித்து வந்தனர். இவர்களது செளகரியத்திற்காகத் தோணித்துறையிலிருந்து பாம்பன் கரைக்குப் படகுகளை இயக்குவதற்கும் பாம்பன் சத்திரத்தில் தங்கிய இந்தப் பயணிகள் இராமேஸ்வரம் செல்வதற்கும் வசதிகளைச் செய்வதற்காக தண்டத் தேவர் என்ற ஒருவரை இராமேஸ்வரம் தீவு ஆளுநராக நியமனம் செய்தார். இவர் மன்னரது இரு பெண் மக்களையும் மணந்தவர்.

நாளடைவில் தண்டத்தேவர் பாம்பனுக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் சாலை வசதி ஏற்படுத்துவதற்காக இராமேஸ்வரம்